பஞ்சாப்,

ந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் உலக கோப்பை  இறுதி போட்டிவரை சென்று, அதிரடியாக ஆடி வெற்றிபெற முடியாவிட்டாலும்,  மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளனர்.

இறுதிபோட்டியில் அபாரமாக ஆடிய ஹர்மன்ப்ரீத் கவுருக்கு பஞ்சாப் காங்கிரஸ் அரசு  போலீஸ் பதவி அளித்து கவுரவப்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பை பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய மகளிர் அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்த்திருந்த இந்த போட்டியில் இந்திய அணி  தோற்றாலும், ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

கிரிக்கெட் என்றால் இந்திய ஆடவர் அணி என்ற பார்வையை மாற்றி, ஆண்கள் கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி போன்றவர்களின் நக்கல்களை மீறி,  நடப்பு சாம்பியனாக இருந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குச் சென்றது இந்திய மகிளர் கிரிக்கெட் அணி.

அரையிறுதிப் போட்டியின்போது,  ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் ஹர்மன்ப்ரீத் கவுர். 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை அதிர வைத்தார், கவுர். இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அவர் அரை சதம் அடித்து உலகத்தையே மிரள வைத்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடி இந்திய மகளிர் அணிக்கு பெருமை சேர்த்த கவுருக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக பஞ்சாப் மாநில அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அவருக்கு பஞ்சாப் காவல்துறையில் பணி வழங்குவதாக அந்த மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு போலீஸ் ஆக வேண்டும் என்ற விருப்பம் குறித்து, தெரிய வந்ததை தொடர்ந்து,  உலகக் கோப்பையில் அவரது அதிரடி ஆட்டத்தால், அவருக்கு பஞ்சாப் காவல்துறை யில் டிஎஸ்பி-யாக நியமித்து அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.