மும்பை,

காராஷ்டிராவில் தலித்மக்களுக்கும், மராத்தி மக்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறை காரணமாக இன்று மும்பையில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

கடந்த 1818ம் ஆண்டு நடைபெற்ற போரில், மகர் எனப்படும் தலித் இனத்தவர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அந்த போரின் 200வது வெற்றிவிழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவின்போது, தலித் சமூக மக்களுக்கும், மராட்டிய இன மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இந்த மோதல் காரணமாக இளைஞர் ஒருவர் பலியானார். அதைத்தொடர்ந்த இந்த கலவரம் மாநிலம் முழுவதும் பதவியது.

கலவரத்தின்போது ஏராளமான வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.  அதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் மீதும் தாக்குதல் நடைபெற்றது. 134 அரசு பேருந்துகள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.  15க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதன் காரணமாக  புனே நகரம்  போர்க்களம் போல் காட்சியளித்தது.

போலீசார் தடியடி நடத்தி கலவரக்காரர்களை விரட்டியடித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் புனே முழுவதும் ரிசர்வ் படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், வன்முறையைக் கண்டித்து, மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள,  பாரிபா பகுஜன் மகா சங்கத் தலைவரும், அம்பேத்கரின் பேரனுமான, பிரகாஷ் அம்பேத்கர், “ இந்த வன்முறை சம்பவங்கள், தலித் மக்களுக்கும், மராட்டிய மக்களுக்கும் இடையேயான மோதல் இல்லை என்றும், வன்முறையை தடுக்க மாநில அரசு தவறிவிட்டது என்று குற்றம் சாட்டிய அவர், முதல்வர்  தேவேந்திர பட்னாவிஸ், நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை ஏற்க முடியாது என்று கூறினார்.

மேலும், வன்முறை குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்றார்.