புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆகஸ்டு 22ந்தேதி பட்ஜெட் தாக்கல்…

Must read

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் வரும் 22-ம் தேதி  முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்  தாக்கல் செய்வார் என்று அம்மாநில பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்தார். ஏற்கனவே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது முழு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

புதுவை சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி 5 மாதங்களுக்கான ரூ.3,613 கோடியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் கூட்டப்பட்ட திட்டக்குழு கூட்டத்தில் இந்த ஆண்டு பட்ஜெட், மத்திய அரசின் நிதியுதவி, மாநில அரசின் வருவாய் மற்றும் கடன் பெறுதல் ஆகியவற்றை உள்ளடக்கி சுமார் ரூ.11,000 கோடி என இறுதி செய்யப்பட்டது. இதையடுதுத டெல்லி சென்ற முதல்வர் ரங்கசாமி, பட்ஜெட் அனுமதி கோரி பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்தார். ரூ.2 ஆயிரம் கூடுதல் நிதியும் கோரினார்.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் நிதித் துறை, புதுவை அரசு குறிப்பிட்டிருந்த ரூ.11,000 கோடியை குறைத்து ஒப்புதல் அளித்தது. புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ரூ.10,696 கோடிக்கு பட்ஜெட்டுக்கு நிதித் துறை ஒப்புதல் தந்துள்ளது.

இது தொடர்பாக இன்று  செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் செல்வம் கூறுகையில், “கடந்த 10-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. அன்றைய தினமே காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கிடைத்து உள்ளதால், வருகிற 22-ம்தேதி காலை 9.45 மணிக்கு நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, ரூ.10,700 கோடிக்கு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வார். பின்பு அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, கூட்டத்தொடர் நாட்கள் குறித்து முடிவு செய்யப்படும்” என்று குறிப்பிட்டார்.

More articles

Latest article