புதுச்சேரி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நாம் இரண்டாம் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளதாகக் கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாஜக ஆட்சியைக் குறை கூறி வருகிறது.  குறிப்பாகக் குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்கள், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு எனப் பல குறைகளைக் கூறி வருகிறது.  ஆனால் பாஜக தரப்பில் இதற்குப் பதில் அளிப்பதைத் தவிர்த்து வருகிறது.  பெகாசஸ் ஒட்டுக் கேட்பு பிரச்சினையால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடப்பதில்லை

இந்நிலையில் புதுவை முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான நாராயணசாமி செய்தியாளர்களிடம், ”மகாத்மா காந்தி வாங்கிக் கொடுத்த சுதந்திரம், மோடி ஆட்சியில் பறிபோய் கொண்டுள்ளது. நாட்டில் தனிமனித சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு இல்லை என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். விலைவாசிகள் உயர்ந்துள்ளது. பணி இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

எனவே மோடி அரசை தூக்கி எறிந்தால்தான் மக்கள் உண்மையான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியும்.  நாம் இரண்டாம் சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். காங்கிரஸ், கட்சியினர் சோனியா, ராகுல் தலைமையில் இன்னொரு சுதந்திரப் போராட்டத்திற்குத் தயாராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இந்த சுதந்திர போர், 2024ல். நாட்டின் பிரதமராக ராகுலைக் கொண்டு வந்து, ஜனநாயகத்தை மீட்போம்.  மக்களுக்கு மோடியின் அடிமை ஆட்சியில் இருந்து விடுதலை கொடுப்போம்.

இப்போது புதுச்சேரியில் ஆட்சி நடைபெறுகிறதா என்பதே தெரியவில்லை. கடந்தாண்டு நாங்கள் 125 கோடி ரூபாய் அதிகமாக நிதி பெற்றோம். இன்று 24 கோடி ரூபாய்தான் வாங்கியுள்ளனர். எனவே இது தோல்வி அடைந்த ஆட்சி எனக் கூற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.