புதுச்சேரி: பேடிக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்! காரசார விவாதம்!!

Must read

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி எம்.எல்.ஏ.,க்கள். போர்க்கொடி தூக்கினர். இதுகுறித்து இன்றைய சட்டசபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

2017ம் ஆண்டின் புதுச்சேரி சட்டசபை கவர்னர் உரை இல்லாமலேயே நேற்று கூட்டப்பட்டது. நாராயணசாமி புதுச்சேரி முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக சட்டசபை நேற்று கூடியது.

வழக்கமாக புதுவை சட்டசபையில் ஆண்டின் முதல் கூட்டம் கவர்னரின் உரையுடனே தொடங்கும். ஆனால், தற்போது புதுவை அமைச்சர்களுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் காரணமாக கவர்னரின் உரை இல்லாமலேயே சட்டசபை  கூடியது.

நேற்றைய கூட்டத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து இன்றைய கூட்டத்தில்  ‘புதுச்சேரி கவர்னரை வெளியேற்ற சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்’ என காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர்.

சபாநாயகர் வைத்திலிங்கம், அரசு தீர்மானத்தை முன்மொழிய அமைச்சரை அழைத்தார். ஆனால் எதிர்க்கட்சியினர் குறுக்கிட்டு கலகம் செய்தனர்.  அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகர் இருக்கை முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து பேசிய  என்.ஆர்.காங். எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த், புதுச்சேரியில் யார் ஆட்சி நடக்கிறது…  கவர்னர் ஆட்சி தான் நடக்கிறது’..  முதல்வர் ஆட்சி நடக்கவில்லை என்றார்.

சபாநாயகர் வைத்திலிங்கம் சட்டமன்ற உறுப்பினர்களை பார்த்து ஒவ்வொருவராக பேசுங்கள் என்றார்.

அதைத்தொடர்ந்து அரசு கொறடா அனந்தராமன்  கவர்னரை எதிர்த்து தீர்மானம்  நிறைவேற்றலாம் என்று கூறினார்.

அதிமுகவை சேர்ந்த .அன்பழகன்  பேசும்போது,  ஆட்சி அமைத்து ஏழு மாதத்தில்   காங்கிரஸ் அரசு அறிவித்த திட்டத்தை என்ன செய்திருக்கிறீர்கள்.  எந்த திட்டத்திலும் புதிய பயனாளிகள் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்று குறைகூறினார்.

தினந்தோறும் முதல்வருக்கும், கவர்னருக்கும் மோதல் என்று செய்தி வருகிறது. இதனால் அரசு அதிகாரிகள் இரண்டாக பிரிந்திருக்கிறார்கள். அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து போயுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு கவர்னர் தொல்லை கொடுத்துக் கொண்டுள்ளார், அதை கூட உங்களால் தடுக்க முடியவில்லை. கவர்னர் இந்த அரசாங்கத்தை மீறி செயல்படுகிறார் என்றால் தீர்மானம் கொண்டு வாருங்கள். அதற்கு நாங்களே ஆதரவு தெரிவிப்போம் என்றார்.

மேலும், தினமும் பத்திரிகையில் பார்த்தால் அவர் (கவர்னர்) தான் சூப்பர் சி.எம்., போல செயல்படுகிறார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் நாராயணசாமி, கவர்னர் தொடர்பாக சட்டசபையில் பேசுவது மரபு கிடையாது என்றார்.

ஆனால் மீண்டும் பேசிய அன்பழகன், மரபு இல்லை என்றால், கவர்னர் மட்டும் டுவிட்டரில் பேசலாமா. இந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லலாமா? என்றார்.

அதையடுத்து பேசிய அரசு கொறடா அனந்தராமன்,  கவர்னர் டுவிட்டரில் புதுச்சேரியில் எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என பதிவிட்டுள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறியுள்ளார்.

தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். மக்கள் விரோதப் போக்குடன் செயல்படும் கவர்னரை வெளியேற்ற சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமிநாராயணன்,  மரபை மீறும் வகையில் கவர்னர் செயல்பட்டு வருகிறார். சட்டசபைக்கு சட்டத்தை நிறைவேற்ற தான் அதிகாரம் உள்ளது என டுவிட்டரில் கூறுகிறார். புதுச்சேரி அரசின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

நம்முடைய அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டிய வகையில் நாம் செயல்பட வேண்டும். கவர்னரின் செயல்பாடு, எம்.எல்.ஏ.,க்களின் உரிமையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

ஜனநாயகத்தில் நாடாளுமன்றம், சட்டசபைக்கு தான் அதிக அதிகாரம் உள்ளது என்று ஆவேசமாக பேசினார்.

அதையடுத்து பேசிய.முதல்வர் நாராயணசாமி,  அரசியல் சட்டத்தின்படி, கவர்னரை சபையில் விமர்சிக்கக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து திமுகவை சேர்ந்த சிவா எம்எல்ஏ பேசும்போது,  கவர்னருக்கும் அமைச்சரவைக்கும் மோதல், மக்கள் பணிகள் நடக்கவில்லை என ஊடகங்கள் கூறி வருகின்றன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு பேச உரிமை உள்ளது.

சர்வாதிகார போக்குடன் கவர்னர் செயல்பட்டு வருகிறார். தனிப்பட்ட முறையில் அதிகாரிகளை அழைத்து பேசுவது, எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரியாமல் திட்டங்களை செயல்படுத்துவது என தனக்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளது போல் செயல்படுகிறார் என்றார்.

மேலும், மணக்குள விநாயகர் கோவில் யானை புதுச்சேரி மக்களுடன் 25 ஆண்டுகளாக உள்ளது. அதை காட்டுக்கு கொண்டு சென்று விடுமாறு கவர்னர் எப்படி கூறலாம்.

மாநில அரசின் மீது பசுமை தீர்ப்பாயத்தில் புகார் செய்கிறார். தான் மாநில நிர்வாகி என்பதை மறந்து செயல்பட்டு வருகிறார்.

இதுபோன்ற கவர்னரை வைத்துக் கொண்டு ஆட்சி நிர்வாகத்தை நடத்த முடியாது என்று கூறினார்.

தொடர்ந்து மற்றொரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ஜெயமூர்த்தி பேசியதாவது,  ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டு செயல்படும் கவர்னரை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவரது செயல்பாடுகளைக் கண்டித்து உண்ணாவிரதம் இருப்பேன் என்று அதிரடியாக கூறினார்.

சபாநாயகர் வைத்திலிங்கம்: உறுப்பினர்கள் யாரும்  தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது. கவர்னரை பற்றி விமர்சனம் செய்யாதீர்கள், அவரது ஆளுமை குறித்து பேசுங்கள் என்றார்.

லட்சுமி நாராயணன் பேசும்போது, கவர்னர்   நீதித்துறையை அரசுக்கு எதிராக துாண்டிவிட முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும்  தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு கடிதம் எழுதி மாநில அரசுக்கு எதிராக செயல்படுகிறார். அதற்கு உரிய ஆதாரம் உள்ளது என்றார்.

அதையடுத்து பேசிய புதுச்சேரி  முதல்வர் நாராயணசாமி: இந்திய அரசியல் சட்டத்தில் கவர்னர், முதல்வருக்கான அதிகாரங்கள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநிலத்தில் கோப்புகள் கவர்னர் பார்வைக்கு அதிகாரிகள் அனுப்பி உள்ளனர்.  கொள்கை முடிவுகள் எடுப்பது, கவர்னருக்கான அதிகாரம், முதல்வரின் அதிகாரம் பிரிவு 25-ன் கீழ் சட்ட ஆலோசனை பெறப்படும்.

கவர்னர் அவரது அதிகார வரம்புக்குள் செயல்பட வேண்டும். அப்போது தான் நிர்வாகம் செம்மை யாக நடைபெறும்.  மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களை அவமதிக்கும் வகையில் கவர்னர் செயல்படக்கூடாது. எந்த கட்சியாக இருந்தாலும் புதுச்சேரியில் எம்.எல்.ஏ., க்கள் மக்களோடு நெருங்கி பழகி வருகின்றனர் என்றார்.

புதுச்சேரியில் தற்போதைய கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடுகள் காரணமாக பல்வேறு கட்சி உறுப்பினர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இன்று சட்டமன்றத்திலும் அனைத்து கட்சி உறுப்பினர்களும்  காரசாரமாக பேசினர்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article