சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வரும் 9ந்தேதி முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து துறையினரின் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு ஏற்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி முன்பதிவு பயணிகளுக்கு தேவைனா விரைவு பேருந்து இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பலன்களை தர வேண்டும், வாரிசுதாரர்களுக்கு வேலை நியமனம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஒவ்வொரு முறை போராட்டம் அறிவிக்கப்படும்போதும், அரசு அவர்களை அழைத்து பேசி, சிறு சிறு கோரிக்கைகளை நிறைவேற்றி, போராட்டத்தை வாபஸ் பெற வைப்பது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில் டிசம்பர் 3ந்தேதி அரசு மற்றும் தொழிலாளர் சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் வருகிற 9-ந்தேதியில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், ஆயிரக்கணக்கில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையிலும், ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளதால், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து கொண்டுதான் இருக்கிறது. இப்போதைய சூழலில் பொங்கல் கழித்து பேச்சுவார்த்தை நடத்தி பரிசீலிக்கலாம் என்று சொல்லி இருந்தோம். ஆனால் அதை தொழிற்சங்கத்தினர் ஏற்க மறுத்து விட்டனர். மேலும், வரும 9-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் என்று அறிவித்து உள்ளனர்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு, சு மூக நிலைக்கு கொண்டு வர தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை இருப்பதாக கூறியவர், பொங்கலுக்கு முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு தேவைய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், தொழிற்சங்கத்தினனர் எந்த சமசரத்துக்கு வராவிட்டாலும், பொங்கலுக்கு முன்பதிவு செய்து உள்ள பயணிகள் தாராளமாக பயணிக்க முடியும் என்றவர், பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் என்ன செய்ய முடியுமோ அதை அரசு மேற்கொள்ளும். நாங்கள் தொழிற்சங்கத்தின் கோரிக்கை எதையும் நிராகரிக்கவில்லை. பொங்கல் கழித்து பேச தயாராக இருக்கிறோம் என்றுதான் சொல்கிறோம்.
ஆனால், அதை கேட்க மறுக்கும் தொழிற்சங்கத்தினர், தங்களது கோரிக்கை 8 வருடமாக நிலவையில் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த 8 வருட நிலுவை என்பது அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 5 வருடம் நிலுவையை வைத்துவிட்டு சென்று விட்டார்கள். அந்த சுமையையும் நாங்கள்தான சுமந்துகொண்டிருக்கிறோம், தற்போதுள்ள நிதி நெருக்கடியில் அதை தாங்க முடியாது. அதுதான் பிரச்சனை.
இதுபோன்ற பிரச்சினைகள் போக்குவரத்து துறை மட்டுமல்ல மற்ற துறைகளில் உள்ளது. இவை எல்லாம் சேரும்போது பெரிய நிதிப்பிரச்சனை வரும். இவை அனைத்தையும் கணக்கெடுத்து விட்டு ஒரு பிளான் பண்ணி செய்வதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருப்பதாக கூறியவர், இந்த சூழலில் இது பொங்கல் நேரம் என்பதால் தொழிற்சங்கத்தினர் டிமாண்ட் வைக்கிறார்கள் என்றார்.
ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது அதிகபட்சமாக எல்லா கோரிக்கையும் முடித்து கொடுத்துள்ளோம். சம்பள விகிதத்தை அ.தி.மு.க. ஆட்சியின்போது சீர்குலைத்து வைத்திருக்கிறார்கள். சீனியர், ஜூனியர் என்ற வித்தியாசம் இன்றி குளறுபடி இருந்தது. அதை நாங்கள் சரி செய்து கொடுத்து அதனால் மாதம் 40 கோடி கூடுதல் செலவானது. இதை நிதித்துறை ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் முதலமைச்சர் அதை கொடுத்து தான் ஆக வேண்டும் என்று சொல்லி செய்து கொடுத்தார். மற்ற கோரிக்கைகள் எல்லாம் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு திருப்திதான். எந்த கோரிக்கையையும் நாங்கள் முடியாது என்று சொல்லவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிலுவையை வைத்துவிட்டு சென்றதால்தான் பார்த்து செய்கிறோம் என்று கூறுகிறோம். எனவே இந்த விஷயத்தில் முதலமைச்சரிடம் கேட்டு விட்டு அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி முடிவெடுப்போம் என்றார்.
ஜனவரி 9ந்தேதி முதல் ‘பஸ் ஸ்டிரைக்’: போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவிப்பு