சென்னை: ஜனவரி 9-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

நடப்பாண்டு,  மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால், அரசியல் கட்சிகள் இப்போதே தங்களது பரப்புரைகளை தொடங்கி உள்ளன. மேலும் மற்றொருபுறம் கூட்டணி மற்றும் கள நிலவரம் குறித்து ஆய்வுகள் நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதிமுகவும், நாடாளுமன்ற தேர்தலில் தங்களது ஆதரவு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களத்தில் இறங்க தயாராகி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற  அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தொண்டர்கள் உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், பாஜக மற்றும் முக்கிய கட்சிகளுடன் கூட்டணி இருக்காது என்றாலும் சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தலில் போட்டியிடும் என தெரிகிறது.

இந்த பரபரப்பான சூழலில்,  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 9-ம் தேதி நடைபெறும்  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

‘புரட்சித் தமிழர்’  எடப்பாடி பழனிச்சாமி  தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 9.1.2024 – செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பது குறித்து கருத்துகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.