சென்னை:  புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், அதை சீரமைத்து, மேம்படுத்த தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் குழு அமைப்பு உத்தரவிட்டு உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, மேலும் நவீனப்படுத்தி, அதற்கு  கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிட்டு திறந்த வைத்துள்ளது திமுக அரசு. செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுள் ஒன்றான இந்த பேருந்து நிலையம் பொங்கலுக்கு முன்னதாக திடீரென திறந்து வைத்து,  செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ள அரசு, அங்கு பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை முறையாக செய்யாமல் அவசர கதியில் திறந்ததால், அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இதனால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் திமுக அரசுமீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதன் காரணமாக,   பேருந்து முனையத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப்பதற்கும் மற்றும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை  மேம்படுத்துவது தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், கும்டா, மாநகர காவல் ஆணையர் (தாம்பரம்), மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், SETC, TNSTC, MTC மற்றும் போக்குவரத்து ஆணையர் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தலைமைச் செயலாளர் சிவ்தான் மீனா அறிவித்து உள்ளார்.

 இந்த குழுவானது  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கத்தை கண்காணிப்பது, ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து கண்காணிப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பிளாஸ்டிக் இல்லாத பேருந்து நிலையமாக பராமரிப்பது, பேருந்து நிலையத்தை தூய்மையாக பராமரிப்பது தொடர்பாக அனைவருக்கும் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். மேலும் பயன்களின் வசதிக்காக பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளையும் அளிக்கும்.