சென்னை:

ஜூலை 3வது வாரத்தில் பொதுத்தேர்வு முடிவுகள்  வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் வரும் 15ந்தேதி முதல் தொடங்கு கிறது. இதற்கிடையில், தேர்வு முடிந்த 12ம் வகுப்பு தேர்வுத்தாள் திருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3வது வாரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறினார்.

தற்போது வரை, ஒரு சிலரை தவிர 10-ம் வகுப்பு மாணவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை, கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்கள்  தேர்வு மையத்துக்கு வேனில் அழைத்து வரப்படுவார்கள், அவர்கள்  தனியாக தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய சூழலில் பள்ளிகள்  மாணவர்களுக்கு  ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது  மட்டுமே சத்தியம் என்று கூறியவர், கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு வகுப்பு நடத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.