இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக தங்க மங்கை பி.டி.உஷா போட்டியின்றி தேர்வானார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பி.டி. உஷா.

இந்த சங்கத்தின் 95 ஆண்டுகால வரலாற்றில் சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற ஒருவர் தலைவராக பதவியேற்பது இதுவே முதல் முறை.

இந்திய அணி சார்பில் 1934 ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற மகாராஜா யுதவிந்தர சிங் 1938 முதல் 1960 வரை இச்சங்கத்தின் தலைவராக இருந்தார்.

இவரை அடுத்து சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஒருவர் தலைவர் பதவி ஏற்பது இது இரண்டாவது முறை என்ற பெருமையும் பி.டி. உஷா-வை சேரும்.

58 வயதான பி.டி. உஷா இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட முதல் தடகள வீராங்கனை என்பதும் ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது இவருக்கு சமீபத்தில் ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை பாஜக அரசு வழங்கியது.

ஒலிம்பிக் சங்கத்திற்கு முறையாக தேர்தல் நடத்தாமல் நிர்வாகிகளை நியமித்துவருவது குறித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கம் கடந்த ஆண்டு இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு 2022 டிசம்பருக்குள் புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தவேண்டும் என்று கெடு விதித்திருந்தது.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் மேற்பார்வையில் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இதில், மூத்த துணைத் தலைவராக இந்திய தேசிய துப்பாக்கி சங்கத்தின் (என்ஆர்ஏஐ) அஜய் படேல்,

துணைத் தலைவர்களாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் ககன் நரங் மற்றும் ரோயிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் ராஜ்லட்சுமி சிங் தியோ,

இணைச் செயலாளராக (ஆண்) அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (AIFF) தலைவர் கல்யாண் சவுபே ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்திய பளுதூக்கும் கூட்டமைப்பு (IWF) தலைவர் சஹ்தேவ் யாதவ் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இணைச் செயலாளர் (பெண்) பதவிக்கு ஷாலினி தாக்கூர் சாவ்லா, சுமன் கௌசிக் மற்றும் இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் (BAI) அலக்நந்தா அசோக் இடையிலான மும்முனைப் போட்டியில் அலக்நந்தா அசோக் வெற்றி பெற்றார்.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் மற்றும் வில்வீரர் டோலா பானர்ஜி ஆகியோர் நிர்வாகக் குழுவில் சிறந்த தகுதி வாய்ந்த எட்டு விளையாட்டு வீரர்களின் (SOM) ஆண் மற்றும் பெண் பிரதிநிதிகளாக உள்ளனர்.

பூபேந்தர் சிங் பஜ்வா, அமிதாப் சர்மா, ஹர்பால் சிங் மற்றும் ரோஹித் ராஜ்பால் ஆகியோரும் நிர்வாகக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

IOA வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மொத்தமுள்ள 14 நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஐந்து பேர் முன்னாள் விளையாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம் மற்றும் டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் அச்சந்தா ஷரத் கமல் ஆகியோர் தடகள ஆணையத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் என்ற முறையில் நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.