சென்னை,
திமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் மறியல் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சசிகலா அதிமுகவுக்குள் வருவதை, அதிமுக தொண்டர்கள் பெரும்பாலோர் விரும்பவில்லை. ஆனால், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சசிகலாதான் அதிமுகவை வழி நடத்த வேண்டும் கூழை கும்பிடு போட்டு, அதற்கேற்றார்போல் பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்துவிட்டனர்.

இதனால் கோபமடைந்த அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
சென்னை அருகே பூந்தமல்லியில் அதிமுக நகரச் செயலாளர் தேவேந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அதில் சசிகலாவை எதிர்த்து கோஷம் போட்டனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பு அடைந்தது..
சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தீபாவை ஆதரித்தும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பேனர் வைத்து அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கேயும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வில்லிவாக்கத்தில் அதிமுக மகளிரணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா இறந்த துக்கம் 30 நாட்கள் கூட முடியவில்லை அதற்குள் கொண்டாட்டம் எதற்கு என்று தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சசிகலாவை பொது செயலாளராக ஏற்று கொள்ள முடியாது கோஷம் எழுப்பிய அதிமுக தொண்டர்கள் மாதனூர் – ஒடுக்கத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபோல் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.