அரசு எச்சரிக்கையை மீறி 7வது நாளாக தொடரும் போராட்டம்! ராஜினாமா செய்ய தயார் என மருத்துவர்கள் சவால்

Must read

சென்னை:

ரசு மருத்துவமனை மருத்துவர்களின் காலவரையற்ற போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்ந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது  பணி முறிவு நடவடிக்கை பாயும் என சுகாதாரத்துறை  அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தங்களது அரசு  பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் அறிவித்து உள்ளனர்.

ஊதிய உயர்வு, 50சதவிகித ஒதுக்கீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25ந்தேதி முதல்  அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு மருத்துவமனைகளில் 18,070 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், தமிழக மருத்துவர் சங்கம் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில்,  அரசு  டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அரசு மருத்துவர்களின் போராட்டத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மருத்துவர்களின் போராட்டத்தில் அரசியல் புகுந்து, தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கிடைத்து வந்த சில சிகிச்சைகளும் தற்போது நிறுத்தப்பட்டு போராட்டம் தீவிரமாக உள்ளது.  தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நடைபெற வேண்டிய அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையடத்து,  தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின்  நிர்வாகிகளை அழைத்து சுகாதாரத்துறை அமைச்சர் பேசி கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.  அதை ஏற்காத ஆனால் டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,  டாக்டர்கள் கூட்டமைப்பு என்று சொல்லப்படும், அமைப்பை சேர்ந்த டாக்டர்கள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை  வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.எ ந்த ஒரு சூழலிலும் அரசு மருத்துவ சேவை தடைபடக்கூடாது என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பல பொது நல வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்  டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம்.  போராட்டத்தை கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருக்கிறோம்.

மழை காலம், டெங்கு  பரவுகிறது, இந்த சூழ்நிலையில் போராட்டம் தவிர்க்கப்பட வேண்டும். இன்றும் போராட்டம் தொடரும் பட்சத்தில், ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை வழங்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், பணிக்கு  வராததாக கருதி, அவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்கப்படும். அதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் உரிய உத்தரவுகளை  பிறப்பித்துள்ளார் என்று கூறினார்.  டாக்டர்கள் பணிக்கு திரும்பாத சூழ்நிலையில், புதிய டாக்டர்கள் மூலம் அவர்களின் இடங்களை நிரப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக பதில் அளித்துள்ள  அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது,  நாங்கள் ஏற்கனவே வருடம் முழுவதும் பணிசெய்துவிட்டு, 6 மாத சம்பளத்தை தான் பெற்று வருகிறோம்.  உரிய சம்பளம் பெற வேண்டும் என்பதற் காகவே போராடி வருகிறோம். ஒரு 10 நாட்கள் பணி நீக்கம் செய்யட்டும். அதனால் எங்களுக்கு  எந்த பாதிப்பும் இல்லை. எங்களை பொறுத்தவரை பணிமுறிவு நடவடிக்கை அல்ல, நாங்கள் மொத்தமாக ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறோம் என்று அரசுக்கு சவால் விடுத்தனர்.

இதனால்  டாக்டர்கள் போராட்டம் மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

More articles

Latest article