சென்னை:
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்‌ சொத்து வரி விகிதங்கள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் சொத்து வரியில்‌ பல ஆண்டுகளாக எந்த உயர்வும்‌ இல்லாததால்‌ உள்ளாட்‌சி அமைப்புகளின்‌ மொத்த வருவாயில்‌ சொந்த வருவாயின்‌ பங்கு பெருமளவு குறைந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின்‌ செலவீனம்‌ பலமடங்கு உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ கீழ்க்கண்டவாறு சொத்து வரி சீராய்வு செய்யலாம்‌ என பரிந்துரைக்கப்பட்ட குழுவின்‌ அறிக்கையானது அரசால்‌ ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மாநகராட்சிகளின்‌ சொத்து வரி உயர்வு தொடர்பான குழுவின்‌ பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு, அதனை  செயல்படுத்திட சம்பந்தப்பட்ட மாநகராட்சியின்‌ மாமன்றம்‌ மூலம்‌ நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய சொத்து வரி சீராய்வுகளின்‌ போது, குடியிருப்புகளின்‌ பரப்பளவிற்கு ஏற்றவாறு தனித்தனியாக பிரித்து சொத்து வரி சீராய்வு செய்வதற்கான நடவடிக்கைகள்‌ எடுக்கப்படவில்லை. ஆனால்‌ தற்போதைய சீராய்வு அடித்தட்டு மக்கள்‌ அதிகம்‌ பாதிக்கப்படாத வகையில்‌ குடியிருப்புகளின்‌ பரப்பளவை 4 வகைகளாக பிரித்து நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது.