ஆளவந்தார் சொத்துக்களை வன்னியர் பொதுசொத்து நலவாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வன்னிய குல பொது அறநிலை பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரிய தலைவர் ஜெயராமன் மற்றும் வாரிய உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆளவந்தார் நாயக்கர் தனக்கு சொந்தமான ஆயிரம்வேலி நிலத்தை திருநட்சத்திர நாட்களில் தணிக்கை செய்து திருவிடந்தை, திருகடல்மலை மற்றும் திருப்பதி கோயில்களுக்கு வழங்கவேண்டும் என்று 22- 6-1914ல் உயில் எழுதி உள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சொத்துக்களை கோயிலுக்கு எழுதி வைக்காமல் தர்ம காரியத்திற்கு பயன்படுத்தவே ஆளவந்தார் நாயக்கர் உயில் எழுதியுள்ளார்.

எனவே, ஆளவந்தார் நாயக்கரின் சொத்துக்களை இந்து சமய அறநிலையத்திடம் இருந்து வன்னிய பொது சொத்து நலவாரியத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று இந்து சமய அறநிலைத் துறையை பலமுறை அணுகியும் ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை, நலவாரியத்திடம் ஒப்படைக்கவில்லை.

இதனிடையே ஆளவந்தார் அறக்கட்டளை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை தனியாருக்கு குத்தகை விடுவதை தடுக்க வேண்டும் என்றும் உடனடியாக ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை வன்னிய பொது சொத்து நல வாரியத்திடம் இந்துசமய அறநிலைத்துறை ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு-வை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.