புதுடெல்லி: 
நாடு தழுவிய முழு அடைப்பு சிறுகுறு தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது என்று  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள ஏழை மக்களின் அமைப்புசாரா தொழில்களை அழித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதைப்பற்றி சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்த ராகுல் காந்தி அதில் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள அனைத்து அமைப்புசாரா தொழில்களையும் அழித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதனை உடனடியாக சரி செய்ய காங்கிரஸ் தனது 2019 தேர்தல் அறிக்கையில் முன்மொழியப்பட்ட திட்டமான குறைந்தபட்ச ஊதிய உத்தரவாத சமூகநல திட்டமான, யுட்மண் ஆய் யோஜனாவை(NYAY) பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை எதுவுமின்றி திடீரென அறிவித்த நாடு தழுவிய முழு அடைப்பு ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக முடக்கி விட்டது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி,  அமைப்புசாரா தொழில்கள் என்பது அதை சார்ந்து இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்திலும்,  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து அதன் தரவுகளையும் பகிர்ந்துள்ளார்.
பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியுடன், கொரோனா ஊரடங்கின்பொழுது பொருளாதாரத்தை பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் சிறு குறு மற்றும் நடுத்தர வணிகங்களின் வளர்ச்சியை மேம்படுத்த அரசு கவனம் செலுத்தாமல், பெரும் தொழிலதிபர்களுக்கு வரி தள்ளுபடி செய்திருப்பதாகவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறிய சில கருத்துக்களை எடுத்துக் காட்டிய ராகுல் காந்தி மத்திய அரசினை கடுமையாக சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இந்த தொடர் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.