திருச்சி:
நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாளை திருச்சி பொன்மலை அருகே பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், திருச்சியில் இன்றுமுதல் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்து திருச்சி காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால், கமலில் பொதுக்கூட்டத்திற்கு தடை இல்லை என்றும், அந்த பொதுக்கூட்டத்திற்கு ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளதால் அந்த கூட்டத்திற்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் தெளிவு படுத்தினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது மாநாடு திருச்சி பொன்மலை பகுதியில் நாளை திருச்சி பொன்மை பகுதியில் நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக, சென்னை எழும்பூரில் இருந்து பகல் 1.30 மணி அளவில கிளம்பிய வைகை விரைவு ரயிலில் கமலஹாசன் பயணம் செய்து வருகிறார். இன்று 6.30 மணி அளவில் அவர் திருச்சி சென்றடைகிறார்.
இதற்கிடையில், திருச்சியில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை எந்த விதமான கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடத்த தடை விதித்து திருச்சி மாகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது கமல் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் நாளை (புதன்கிழமை ) பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை மற்றும் மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ள நிலையில், திருச்சி காவல் ஆணையர் இன்று திடீர் உத்தரவு போட்டி ருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் மட்டும் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்திருப்பது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கமல் பொதுக்கூட்டம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளபடி நடைபெறும் என்றும், அதற்கு தடை இல்லை என்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் தெளிவுபடுத்தி உள்ளார்.