சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நடிகர் சங்கம் சார்பில் ஏப்ரல் 8ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சியினர், வணிகர்கள், விவசாயிகள்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதுபோல தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  திரையுலகினரும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர். இன்று காலை நடிகர் சங்க உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம், மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.

இந்த கண்டன அறவழி போராட்டத்தில் திரைப்பட துறையை சார்ந்த அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.