சென்னை:

ருப்புக்கோட்டை பேராசிரியை  நிர்மலா தேவி விவகாரத்தில், கவர்னர் அமைத்த விசாரணை குழுவான,  சந்தானம் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாலும், அதனை வெளியிடக்கூடாது என  பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது!

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய கவர்னர், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை விசாரித்து அறிக்கை தரும்படி விசாரணை கமிஷன் அமைத்தார். தமிழக அரசு சார்பில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சந்தானம் குழுவினர் மதுரை பல்கலைக்கழகம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி, பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் நிர்மலாதேவி,அவருக்கு துணைபோன  முருகன், கருப்பசாமி போன்றோரிடமும் விசாரணை நடத்தியது.

சந்தானம் குழுவினரின் விசாரணை முடிவடைந்த நிலையில், விரைவில் கவர்னரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவியின் ஜாமின் மனுவை ஸ்ரீவில்லிப்புத்தூர் கோடைக்கால நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. நிர்மலா சார்பில் வழக்கறிஞர் ராமநாதன், மதுரை வழக்கறிஞர் மகாலிங்கம் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.  இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாலும் அதனை வெளியிட பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.