ஜெய்பீம் விவகாரம் தொடர்பாக சூர்யாவுக்கு ஆதரவு அளித்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர் எம்.எஸ். முருகராஜ் கடிதம் எழுதியிருக்கிறார்.

நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் அவர்களுக்கு வணக்கம்,

ஒரு சிறந்த கலைஞனின் படைப்பு என்பது சமூக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்று கருதுபவன் நான். சமூக நல்லிணக்கத்தை உருவாக்க முடியவில்லை என்றாலும் அதை சீர்குலைக்காமல் இருப்பது ஒவ்வொரு கலைஞனின் தார்மீக கடமை என்பதை வேதம் புதிது எடுத்த தலைவருக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.

தமிழகத்தில் உள்ள பெரும் மக்கள்தொகை கொண்ட ஒரு சமுதாயத்தை தவறாக சித்தரித்து படம் எடுத்ததை கண்டித்து அந்த சமுதாய தலைவர்கள் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொல்லாமல் குறைந்தபட்ச வருத்தம் கூட தெரிவிக்காமல் ஒருவார காலமாக தன் படத்திற்கு சுய விளம்பரம் தேடிக் கொண்டிருக்கும் சூர்யா தயாரிப்பாளர் சங்கத்தினால் கண்டிக்கத்தக்கவரே ஒழிய ஆதரவு தரும் அளவிற்கு சிறந்த பண்புள்ள பதிலை சூர்யா அந்த மக்களுக்கு கூறவில்லை.

சினிமா தொழில் செய்யும் நமக்கு பார்வையாளர்கள் தான் முதலாளிகள். அப்படிப்பட்ட முதலாளிகளில் ஒரு பகுதியினரின் மனதை புண்படுத்துவது எவ்வகையான நியாயம்?

பெரும்பான்மை சமுதாயத்தையே தவறாக சித்தரித்து படம் எடுக்கப்படும் எனில் நாளை சிறுபான்மை சமுதாயத்திற்கும் இதே நிலை வராது என்பதற்கு உத்திரவாதம் உங்களால் தர முடியுமா?

நாளை சூர்யாவின் சாதியையோ அல்லது அவருக்கு ஆதரவாக இருப்பவர்களின் சாதியையோ படைப்பு சுதந்திரம் எனும் பெயரில் தவறாக சித்தரித்து ஒரு படைப்பு வரும் பட்சத்தில் அது தமிழ் சமூகங்களுக்கு இடையேயான சாதிய கலவரங்களுக்கு வழி வகுக்கும் அபாயம் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். முதலில் சூர்யா புரிந்துகொள்ள வேண்டும்.

சுதந்திரம் என்ற பெயரில் ரோட்டில் நிர்வாணமாக நடப்பது இந்த சமூகத்திற்கு எவ்வளவு பெரிய அசிங்கமோ அது போன்ற அசிங்கம்தான் சூர்யா குறிப்பிடும் படைப்பு சுதந்திரம்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெயருடன் உருவான ஜெய்பீம் எனும் ஆக சிறந்த படைப்பில் பெரும் விஷம் கலந்த குறியீடுகளும் புனைவு பெயர்களும் எதற்காக?

சிறந்த படைப்பை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டாம் என்று சிலரது பதிவுகளை பார்த்தேன்.

இலை நிறைய பல வகை உணவுகளை விருந்து வைத்து இலையின் ஓரத்தில் அசிங்கத்தை வைத்தால் அதை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்காமல் மூக்கை மூடிக்கிட்டு சாப்பிடக்கூடியவர்கள் சொல்லும் பதிலாக வேண்டுமானால் அது இருக்கலாம்.

ஆனால் வேதம் புதிது கண்ட இயக்குனர் இப்படி சொல்வது தான் வருத்தமளிக்கிறது.

குறியீடுகளை நீக்கிவிட்டோம் என்று சப்பைகட்டு கட்டுவது சிறந்த கலைஞனின் சிறந்த பண்பு அல்ல.

தயாரிப்பாளர், கதாநாயகன் என யாருடைய பார்வையிலும் படாமல் டெக்னீஷியன்களால் ஒரு தவறு நடந்துவிட்டது என்பதை சினிமா தெரியாதவர்கள் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு தயாரிப்பாளராக அதை நான் ஏற்க மாட்டேன்.

திரையரங்குகளில் மக்களின் கொண்டாட்டங்களினால் உயர்ந்து வந்த நடிகர் சூர்யா, நம் திரைப்படத்துறையின் ஒரு அங்கமான வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தன் தயாரிப்பில் படங்களை கொடுக்காமல் கார்ப்பரேட் கம்பெனிக்கு கொடுத்த கார்ப்பரேட் வியாபாரி நடிகர் சூர்யாவுக்கு திரைப்படத்துறை ஆதரவு என்பது வேதனை அளிக்கிறது.

ஒருவாரகாலம் அந்த குறியீடு பொதுவெளியில் மக்கள் பார்வைக்கு வந்த பிறகு அதற்காக மன்னிப்பு கேட்பது அல்லது அதற்கு வருத்தம் தெரிவிப்பது என்பது தான் விவாதங்கள் இல்லை சுமூகமான முடிவாக இருக்கும் என்பது நடிகர் சூர்யாவிற்கும் தெரியும். இருந்தும் ஏனோ அதை செய்ய மறுக்கிறார். அவரது சுய லாபத்திற்கு நடப்பு தயாரிப்பாளர் சங்கம் நியாயமற்ற முறையில் துணை நிற்பது வருத்தமளிக்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.