லாகூர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்  தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 8 ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவருமான இம்ரான்கான் மற்றும் அவரது கட்சியினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.  ஆனால் தேர்தல் அதிகாரி பஞ்சாப் மாகாணத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக இம்ரான்கான் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்தார்.

தன்னுடைய பதவிக் காலத்தில் வெளிநாட்டுத் தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை அரசுக் கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே தேர்தல் ஆணையம், வேட்பு மனுக்களை நிராகரித்தது. அவரது ஆதரவாளர்கள் பலரது மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

லாகூர் உயர்நீதிமன்றத்தில்  இம்ரான்கான் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தனர். எனவே  இம்ரான்கான் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது.இன்னும் 3 நாட்களில்  இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு சின்னம் ஒதுக்கீடு செய்ய உள்ளதால் அதற்குள் இம்ரான்கான் மேல்முறையீடு செய்து போட்டியிட அனுமதி பெற முடியுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.