சண்டிகார்:

பிரியங்கா காந்தி வதேராவின் வருகை நாட்டுக்கும் குறிப்பாக உத்திரப்பிரதேசத்துக்கும் அவசியமானது என்று பாஜக எம்பி அஸ்வின் குமார் கூறியிருப்பது பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஹரியானா மாநிலம் கர்னல் தொகுதி பாஜக எம்பியாக இருப்பவர் அஸ்வின் குமார் சோப்ரா.
டெல்லியிலிருந்து வெளிவரும் பஞ்சாப் கேசரி நாளேட்டில் ஆசிரியராகவும் இருக்கிறார்.

இந்த நாளேட்டில் பிரியங்கா குறித்து இவர் எழுதிய தலையங்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திராகாந்தியின் உருவத்துக்குள் பிரியங்கா காந்தியின் உருவம் தெரிவது போன்ற படத்தை வெளியிட்டு அவர் எழுதியுள்ள கட்டுரையில், ‘முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியையும் பிரியங்காவையும் ஒப்பிட்டுள்ளார்.
இந்திராவின் பிரதிபலிப்பாகாக விளங்கும் பிரியங்காதான் இந்திராவின் வாரிசு. இந்த நாடும், குறிப்பாக, உத்திரப்பிரதேச மக்கள் பிரியங்காவின் வருகைக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியங்காவின் வருகை காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்பதை 2 பக்கங்கள் கொண்ட தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ள அஸ்வின், “அவரின் வருகை, உத்திரப்பிரதேசத்தில் உள்ள சாதி, மத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்” என்று கூறியுள்ளார்.

என்றைக்குமே காங்கிரஸ் கட்சி சாதி, மதம், வகுப்புவாதம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இருந்ததில்லை என்று கூறியுள்ள அவர், கட்சி செல்வாக்கை இழந்திருந்தபோதுகூட, இதற்கெல்லாம் அவர்கள் சமரசம் செய்து கொண்டதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏழை மக்களின் நலனுக்காக பாடுபட்டுக் கொண்டிருப்பதுதான், இந்த பழமையான காங்கிரஸ் கட்சியின் பெருமைக்குரிய விசயம் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

காந்தி,நேரு, மவுலானா ஆசாத், அம்பேத்கார், இந்திரா காந்தி என பல நிலைகளை கடந்த காங்கிரஸ் கட்சி, ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்காகவே பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்றும், அதனால்தான் சுதந்திரத்துக்குப் பின்பும் நாடு ஸ்திரமாக இருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.

கடைசி நூற்றாண்டின் வரலாறு என்பதே, அது காங்கிரஸின் வரலாறாகத்தான் இருக்க முடியும் என்று புகழாரம் சூட்டியுள்ள அவர், காங்கிரஸ் கட்சியின் நோக்கமே வளர்ச்சியை நோக்கியதாகத்தான் இருந்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை வாரிசு அரசியல் என்று விமர்சிப்பது குறித்து குறிப்பிட்டுள்ள அவர், பாஜகவோடு கூட்டணி கட்சிகளாக இருந்த சிவசேனா, அகாலிதள் கட்சிகள் வாரிசு கட்சிகள் தானே என கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் எம்பியாக வெற்றி பெற்றதிலிருந்தே பாஜகவுடன் மோதல் போக்கைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் மற்றும் அமைச்சர்களின் ஊழல் குறித்து எழுதியும், பேசியும் வரும் சூழலில்,பிரியங்கா அரசியல் வருகை குறித்த அவரது தலையங்கம் பாஜகவினரை பதற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.