கிம்பூர் கேரி

கிம்பூர் கேரி செல்ல முயன்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு எந்த ஒரு வழக்கும் பதியாமல் 28 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இதில் ஒரு கட்டமாக நேற்று முன் தினம் லகிம்பூர் கேரி பகுதிக்கு வந்த துணை முதல்வருக்குக் கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் திரண்டு இருந்தனர்.  அப்போது பாஜகவினர் வந்த கார் அணிவகுப்பில் இருந்து இரு கார்கள் அங்குக் கூடியிருந்த விவசாயிகள் இடையே பாய்ந்து இருவர் அங்கேயே உயிர் இழந்தனர்.

இதையொட்டி அங்கு வெடித்த வன்முறையால் மேலும் 6 விவசாயிகள் உயிர் இழந்தனர்.  விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் இருந்ததாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.  இதை அஜய் மிஸ்ரா மறுத்துள்ளார்.  இந்த சம்பவத்தால் நாடெங்கும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  எதிர்க்கட்சியினர் இந்த நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல அங்குக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி சென்றார்.  அவர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுக் கடந்த 24 மணி நேரமாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  இது குறித்து அவர் டிவிட்டரில் “ஐயா நரேந்திர மோடி, உங்கள் அரசு என்னைக் கடந்த 28 மணி நேரமாக எவ்வித உத்தரவோ வழக்குப் பதிவோ இல்லாமல் காவலில் வைத்துள்ளது” எனப் பதிந்துள்ளார்.

இந்த விபத்துக்குக் காரணமானவர் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.