லக்னோ: 2022ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில்,   பிரதிக்யா யாத்திரையை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா இன்று துவக்கி வைத்தார்.

உ.பி. மாநில சட்டசபை தேர்தல் 2022ம் ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு இப்போதே தேர்தல் களம் அனல்பறக்கிறது. ஆட்சியில் உள்ள பாஜக ஒருபுறமும், காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பிஎஸ்பி கட்சிகள் என மற்றொருபுறமும் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி உள்பட  பல கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை துவங்கிவிட்டன. சமாஜ்வாதி கட்சி சார்பில் ரத யாத்திரை மற்றும் ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கி வருகிறது. இன்று உ.பி. காங்கிரஸ் கட்சி சார்பில், இலவச ஸ்கூட்டம், மொபைல் போன், விவசாய கடன் தள்ளுபடி உள்பட 7 உறுதிமொழிகள் வழங்கப்பட்டு உள்ளன.

இதையடுத்து,  பிரதிக்யா யாத்திரை என்ற பெயரில் அரசியல் ஊர்வலத்தை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கொடியசைத்து துவங்கியுள்ளார். அதன்படி மூன்று யாத்திரைகள் நடத்தப்பட உள்ளது.

பாரபங்கியில் இருந்து பந்தல்கண்ட் வரை ஒரு யாத்திரையும்,  சஹாரன்பூரிலிருந்து மதுரா வரையும்,  வாரணாசி முதல் ரேபரேலி வரை என 3 யாத்திரைகள் நடைபெறும் என்றும் – இந்த யாத்திரையின்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தொண்டர்கள் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

யாத்திரையை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரியங்கா,  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் தாங்கள் உத்தரபிரதேச மாநில குடிமக்களுக்கு செய்யவுள்ள நன்மைகள் குறித்து இந்த யாத்திரையில் எடுத்துரைக்கப்படும் என்றும்,  வரும் நவம்பர் 1ஆம் தேதியோடு இந்த அரசியல் யாத்திரை நிறைவடைய உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இலவச ஸ்கூட்டர், விவசாய கடன் தள்ளுபடி, 20லட்சம் அரசு வேலை உள்பட 7 அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி…