டில்லி

பாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 3 வருடங்களுக்கு முன்பு #மீடூஇந்தியா என்னும் பெயரில் டிவிட்டரில் ஒரு குழு தொடங்கப்பட்டது.  இந்த குழு இந்தியாவில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்கள் தங்கள் அனுபவத்தை மற்றவருக்கு தெரிவிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது.   அது முதலே இந்த குழுவில் மட்டுமின்றி தனியாகவும் பல பெண்கள் தாங்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதைத் தைரியமாகப் பகிர்ந்து வந்தனர்.

2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக எம் ஜே அக்பர் பணியாற்றி வந்தார்.  பிரபல பத்திரிகையாளரான இவர் பிரதமர் மோடிக்கும் மிகவும் நெருக்கமானவர் ஆவார்.   பிரபல பெண்  பத்திரிகையாளரான பிரியா ரமணி தனக்கு எம் ஜே அக்பரின் கீழ் பணியாற்றிய போது அவர் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கருத்து வெளியிட்டிருந்தார்.

அத்துடன் மேலும் பலர் எம் ஜே அக்பரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர உள்ளதாகவும் பிரியா ரமணி தெரிவித்திருந்தார். அதைப் போல் பல பெண்கள் தாங்களும் எம் ஜே அக்பரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாகத் தெரிவித்தனர்.  ஆனால் யாரும் சட்டப்பூர்வமாக வழக்கு தொடரவில்லை.   ஆயினும் எம் ஜே அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு பிரியா ரமணியின் குற்றச்சாட்டால் தனது நற்பெயருக்கு களங்கம் உள்ளானதாகக் கூறி டில்லி நீதிமன்றத்தில் எம் ஜெ அக்பர் அவதூரு வழக்கு தொடர்ந்தார்.   பிரியா ரமணியின் குற்றச்சாடுகள் போலியானவை எனத் தனது வழக்கு மனுவில் எம் ஜே அக்பர் தெரிவித்திருந்தார்.  மூன்று வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில் இந்த வழக்கில் இருந்து பிரியா ரமணி விடுவிக்கப்பட்டுள்ளதாக டில்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.  இந்த தீர்ப்புக்கு பல பெண்ணிய வாதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.   இந்த தீர்ப்பின் போது நீதிமன்றத்துக்கு வந்திருந்த மூத்த பெண் பத்திரிகையாளர் பர்க்கா தத்  தமது டிவிட்டரில்,, ”ஆம். அக்பரின் அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்த தீர்ப்பு மூலம் தங்களுக்கு நிகழும் கொடுமைகளை மேலும் பல பெண்கள் வெளியில் சொல்ல குடியும்” எனத் தெரிவித்துள்ளார்.,

இந்த தீர்ப்பைப் பெண் பத்திரிகையாளர் நீலாஞ்சனா ராய், இடது சாரி தலைவர் கவிதா கிருஷ்ணன், பத்திரிகையாளர் ராணா அயூப் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர்.   வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், “ஏற்கனவே பாலியல் தொந்தரவுக்கு ஆளான பிரியா ரமணி நீதிமன்ற நடைமுறைகளால் பல துன்புறுத்தல்களை அனுபவித்துள்ளார்.  ஆகவே அவருக்கு எம் ஜே அக்பர் இழப்பீடு அளிக்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.