நாகர்கோவில்
ரிசர்வ் வங்கியின் ஆணையை மீறி தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தவணை தொகையை அளிக்குமாறு வலியுறுத்துவதாக புகார் எழுந்துள்ளது
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பலரது வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. பலர் பணி இழந்தும் பலர் ஊதிய வெட்டுக்கும் ஆளாகி துயருற்று வருகின்றனர். இவர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் தவணைத் தொகையை மூன்று மாதங்கள் கழித்துச் செலுத்தலாம் என்னும் ஆணை மிகவும் நிம்மதியை அளித்தது. ஆனால் அந்த நிம்மதிக்கும் தற்போது ஒரு சில தனியார் நிதி நிறுவனங்கள் வேட்டு வைத்துள்ளன.
இன்று பச்சை தமிழகம் கட்சியின் தலைவர், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர், மகளிர் குழு செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் லட்சக்கணக்கான மகளிர் மற்றும் கூலித் தொழிலாளர்கள் தனியார் நிறுவனங்களிடம் இருது கடன் பெற்றுள்ளனர். இந்த தொகையைத் தவணை முறையில் வாரம், மாதம் இருமுறை அல்லது மாதம் ஒரு முறை என வட்டியுடன் திருப்பி செலுத்துகின்றனர்.
தற்போது ஊரடங்கு காரணமாக இவர்கள் வருமானம் முடங்கி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களால் கடன் தவணைகளைச் செலுத்த முடியவில்லை. ரிசர்வ் வங்கியின் ஆணையை மீறி கடன் வழங்கிய தனியார் நிறுவனங்கள் தவணை தொகையைக் கேட்டு நிர்ப்பந்தம் செய்கின்றன. நிறுவன ஊழியர்கள் வீடுகளுக்குள் அத்துமீறி பிரவேசித்து கடன தொகையைக் கேட்டுத் தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர்.
இதனால் கடன் பெற்றோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் எனவே நிதி நிறுவனங்கள் ஊரடங்கால் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்தபடி காலக்கெடு வழங்க வேண்டும். இவ்வாறு செய்யாத நிதி நிறுவனங்கள் மீது அரசு கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இந்த நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் ” என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.