புழல்: சென்னையின் புறநகர் பகுதியான புழல் பகுதியில் அமைந்துள்ள மத்தியசிறை வளாகத்தில் சிறை வார்டன் காசிராஜன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சிறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறையில் பணிச்சூழல், உயர்அதிகாரிகளின் நெருக்கடி போன்ற காரணங்களால் பல காவலர்கள் தற்கொலை முடிவை நாடுகின்றனர். இதை தடுக்க, காவலர்களுக்கு வார விடுமுறை உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் காவலர்கள் தற்கொலை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

இந்தநிலையில்,  புழல் மத்திய சிறை வளாகத்தில் காவலர் ஒருவர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்டவர் பெயர் காசிராஜன். 29வயதாகும், அவர் புழல் சிறையில் கடந்த 5 வருடங்களாக வார்டனாக பணியாற்றி வருகிறார். சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.  இந்த நிலையில், அவர்  நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புழல் சிறை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட வார்டன் காசிராமன் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.