டில்லி:

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை பிரதமர் மோடி நேற்று கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசுகையில், ‘‘நாட்டின் நலன் கருதி எதிர்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டக்களை கவனித்துக் கொண்டிருந்தேன். தற்போது இதற்கு பதில் கூற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்த நாட்டு மக்கள் உண்மையை அறிய வேண்டும். வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு அதிகரிப்புக்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தான் காரணம். 100 சதவீதம் அவர்கள் தான் தவறு செய்துள்ளார்கள்’’ என்றார்.

இதற்கு சில புள்ளி விபரங்களை மோடி தெரிவித்தார். அதில், ‘‘காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரை செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 36 சதவீதம் தான் என்று கூறி வந்தனர். 2014ல் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆவணங்களை பார்த்த போது காங்கிரஸ் தவறான புள்ளி விபரங்களை அளித்திருப்பது தெரியவந்தது. அப்போது செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 82 சதவீதம் இருந்தது’’ என்று தெரிவித்தார்.

இந்த புள்ளி விபரங்களை என்டிடிவி ஆய்வு செய்தது. அப்போது 2013-2014ல் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 3.8 சதவீதம் தான். 82 சதவீதம் இல்லை என்பது ரிசர்வ் வங்கி புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்தது. ஆனால், 2014 மார்ச்சில் பொதுத் துறை வங்கிகளின் வராக்கடன் தான் ரூ. 52 லட்சம் கோடியாக இருந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் புள்ளி விபரப்படி வங்கிகள் வங்கிய கடன் தொகை இது என்பதும், இது செயல்படாத சொத்துக்களின் மதிப்பு கிடையாது என்பதும் தெரியவந்தது. இந்த தொகையை தான் செயல்படாத சொத்துக்கள் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மோடி ஆட்சிக்கு வந்த 2ம் ஆண்டான 2015&16 மற்றும் கடந்த ஆண்டிலும் தான் செயல்படாத சொத்துக்களின் மொத்த மதிப்பு இரட்டிப்பாக 7.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த புள்ளி விபரங்கள் அடங்கிய பிரதமரின் வீடியோ மற்றும் புள்ளி விபரங்கள் பாஜக கையாளும் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த புள்ளி விபரங்கள் தவறானவை என்று என்டிடிவி டுவிட்டரில் வெளியிட்ட சில நிமிடங்களில், பாஜக டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த வீடியோ காட்சியும், புள்ளி விபரங்களும் அழிக்கப்பட்டுவிட்டது.