ஹிரோஷிமா:

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் பெண்கள் பங்குபெறும் ஹாக்கி இறுதிப் போட்டியில், ஜப்பான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான சீரிஸ் பைனல்ஸ் தொடர் நடந்தது.

இறுதி ஆட்டத்தில், உலகின் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 14-&வது இடத்தில் உள்ள ஜப்பான் அணியை சந்தித்தது.

ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் கேப்டன் ராணி ராம்பால் முதல் கோல் அடித்தார்.

இதற்கு, 11-வது நிமிடத்தில் ஜப்பானின் கனான் மோரி, ஒரு பீல்டு கோல் அடித்தார்.  முதல் பாதி முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.

பின் 45வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்த இந்தியாவின் குர்ஜித் கவுர், 60வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோல் அடித்தார்.

ஆட்ட முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் வரும் 2020ல் ஜப்பானில் நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாட தகுதி பெற்றன.

பெண்களுக்கான ஹாக்கிப் போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.