லண்டன்:

லண்டனில் லார்ட்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எளிதாக வீழ்த்தியது பாகிஸ்தான்.

பாகிஸ்தான்-தென் ஆப்பிரக்கா அணிகள் மோதும் உலகக் கோப்டை தொடரின் 30-வது லீக் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து பாகிஸ்தான் அணி 308 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களம் இறங்கியது.

தொடக்க வீரர்களாக அம்லாவும், டி காக்கும் ஆடினர், ஆனால், அம்லா 2 ரன்களின் அவுட் ஆனார். அடுத்து வந்த டுபிளிசிஸ், டி காக்குடன் சேர்ந்து ஆடினர். இருவரும் பொறுப்பாக ஆடினர். டி காக் 47 ரன்கள் எடுத்தபோது, அவுட் ஆனார்.

அதன்பின் வந்த மார்க்ராம் 7 ரன்களில் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்தாலும் டு பிளிசிஸ் அரை சதம் அடித்தார்.

இது தென் ஆப்பிரிக்காவுக்கு உற்சாகம் தருவதாக அமைந்தது. ஆனால் இந்த உற்சாகம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்தில் கேட்ச் கொடுத்து டு பிளிசிஸ் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட் ஆனார்கள்.

தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 259 ரன்கள் எடுத்தது. இறுதியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றி பெற்றது.