புதுடெல்லி :

வேளாண் மசோதா விவசாயிகளுக்கு ஆதரவானது, விவசாயிகளுக்கு நன்மைபயக்கக் கூடியது, வேளாண் மசோதா மூலம் கருப்பு பணத்தை ஒழித்துவிட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்தரகண்ட் மாநில வளர்ச்சி திட்டங்களை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்த பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றி அதனை சட்டமாக அரசிதழில் வெளியிட்டிருக்கும் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ள அதேவேளையில், பிரதமர் இவ்வாறு கூறியிருப்பது வேதனையளிப்பதாக உள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

புதிய வேளாண் சட்டங்களில் விவசாயிகளை பாதிக்கும் பல்வேறு அம்சங்கள் நிறைந்திருப்பதாகவும், தங்கள் சந்ததியினர் வருங்காலத்தில் தங்கள் சொந்த நிலங்களிலேயே கொத்தடிமைகளாக மாறும் நிலை உள்ளதாகவும் கூறி விவசாயிகள் போராடி வருகின்றனர்.

தாங்கள் வியர்வை சிந்தி உழைத்து ஆடு, மாடுகளிடமிருந்தும் குரங்கு, யானை உள்ளிட்ட வன விலங்குள்களிடமிருந்தும் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரிலிருந்தும் தங்கள் பயிரை காப்பாற்றி, அறுவடை செய்யும் விளை பொருட்களின் தரத்தை, ஒப்பந்தம் என்ற போர்வையில் முன்நிர்ணயம் செய்வதும், நிர்ணயித்த தரம் குறையும் பொருட்களுக்கான விலையை, கார்ப்பரேட் கம்பெனிகள் மறுநிர்ணயம் செய்ய வழிசெய்திருப்பதும் அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துணைபோவதையே காட்டுகிறது என்று விவசாயிகள் குரலெழுப்பி வருகின்றனர்.

2014 தேர்தலுக்கு முன் வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாகவும், 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நாட்டில் உள்ள மொத்த கருப்புப் பணமும் ஒழிக்கப்பட்டதாகவும், 2017 ல் ஜிஎஸ்டி நடைமுறையின் போது வணிக நிறுவனங்களில் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டதாக கூறியவர்கள், இப்போது விவசாய வருமானத்தில் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

விவசாய வருமானத்தில் கருப்புப் பணம் இருப்பதாகக் கூறும் பிரதமர் மோடி,

  • கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துணை போகும் மசோதாக்களை நிறைவேற்றியது ஏன் ?
  • ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்ய எண்ணம் இல்லாத விவசாயிகள் அவர்களின் விளை பொருட்களை எங்கு, எப்படி, யாரிடம் விற்பது ?
  • வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், காபி போர்டு ஆப் இந்தியா போன்று செயலற்ற அமைப்பாக மாறிவிடுமா ?
  • ஒப்பந்த விவசாயத்தில் முன்னோடியாய் திகழும் பெருமுதலாளிகளின் காபி மற்றும் தேயிலை தோட்டங்களில் புரளும் கருப்புப் பணத்தை தடுப்பதற்கு கடந்த ஆறு ஆண்டுகளாக என்ன செய்தார் ?
  • 2016 பணமதிப்பிழப்பிற்கு பின் நாட்டில் கருப்பு பணம் புழங்க யார் காரணம் ?

என்று அடுக்கடுக்கான கேள்விகளை விவசாயிகள் எழுப்பி வருகின்றனர்.

இடைத்தரகர்கள் கையில் இருந்து விவசாயிகள் காப்பாற்றப்பட்டதாக கூறும் பிரதமரின் இந்த புதிய வேளாண் சட்டத்தை, விவசாயி என்று கூறிக்கொண்டு இடைத்தரகர்களும், கமிஷன் ஏஜெண்டுகளும் தான் ஆதரிக்கின்றனர் என்றும் கருப்புப் பணத்தை ஒழிக்க நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் பணத்தையும் செல்லாக்காசாக்கிய அரசு தற்போது ஒப்பந்த விவசாயம் மூலம் கருப்பு பணம் பார்க்கும் கார்ப்பரேட் முதலாளிகளை தடுப்பதை விட்டுவிட்டு நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளையும் கேலிப் பொருளாக்கியுள்ளது வேதனையளிப்பதாக உள்ளது என்று விவசாயிகள் கூறிவருகின்றனர்.