சென்னை: சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். இந்த கூட்டத்தில் அவருடன், டாக்டர் ராமதாஸ் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கட்டியணைத்தார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு,  தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள உள்ளது. நாளை வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. ஆனால், பாஜக கூட்டணி இன்னும் நிறைவுபெறாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில்  பாஜக காலூன்றும் வகையில்,  தொடர்ந்து வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.  நேற்று  மாலை கோவையில் நடைபெற்ற வாகனப் பேரணியில் கலந்து கொண்ட மோடி, இன்று காலை பாலக்காடு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

தொடர்ந்து,  இன்று மதியம் ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அதையடுத்து, சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார். அங்கு பாஜகவினர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் மோடியுடன்  பாஜக மேடையில் அமர்ந்துள்ளனர். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக எம்எல்ஏக்கள் குஷ்பு, சரத் குமார் உள்ளிட்டோரும் மேடையில் அமர்ந்துள்ளனர்.

கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. வின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மேடைக்கு வந்த பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு வெள்ளி பேழையில் ஜவ்வரிசி பரிசாக வழங்கப்பட்டது.

பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கட்டியணைத்தார்.

கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், சமூக நீதி இலக்கணத்திற்கு முன்னுதாரணமாக பிரதமர் மோடி, ராமதாஸ் திகழ்கின்றனர். கடந்த 5 நாட்களாக தென்னிந்தியா முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்துள்ளார் என்றார்.

பின்னர் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டின் பலம் பொருந்திய தலைவர்களை அழைத்து வந்துள்ளார் பிரதமர் மோடி. 400 தொகுதிகளுக்கு மேல் வென்று, 3-வது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைக்கும். ராமதாசின் கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்றார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய சரத்குமார், இந்தியா மேலும் வலிமை அடைவதற்கு மோடியின் ஆட்சி தேவை. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

அன்புமணி ராமதாஸ் பேசும்போது, பொதுக்கூட்டத்தில் நாங்கள் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி வரவேண்டும் என்பது பா.ம.க.வின் விருப்பம் என்றார்.

இதனிடையே பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்று பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர். பிரதமர் மோடியின் வாகனத்தில் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் உடன் வந்தனர்.