சென்னை:
தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கவர்னர் வித்தியாசாகர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது.
தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அக் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் அதிகாரப்போட்டி நடந்துவருகிறது. இருவரும் தங்களுக்கு சட்டமன்றத்தில் மெஜாரிட்டி உள்ளது என்று ஆளுனர் வித்தியாசகரிடம் நேற்று தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து நேற்று ஆளுநர், மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். இன்று இரண்டாவது அறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் தற்போதைய சூழலில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே இன்று கவர்னர் வித்தியாசாகரை, தமிழக டிஜிபி ராஜேந்திரன் சென்று சந்தித்தார். பிறகு தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் அவரைத் தொடர்ந்து சென்னை காவல்துறை ஆணையாளர் ஜார்ஜூம் சந்தித்தனர்.
அவர்களிடம் தமிழக சட்டம் ஒழுங்கு நிலை பற்றி ஆளுநர் ஆலோசித்தார்.
இந்த நிலையில், இன்று இரவு அல்லது நாளை, தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி தமிழக டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளருக்கு ஆளுனர் உத்தரவிட்டுள்ளாகவும் சொல்லப்படுகிறது.