சென்னை:

மிழக கவர்னராக இருந்த ரோசையாவின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்டு 30ம் தேதியுடன் முடிவடைந்தது.   அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று தகவல் உலா வந்த நிலையில்,  தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக மகாராஷ்டிர கவர்னர் வித்யாசாகரை மத்திய அரசு நியமனம் செய்தது.

இதற்கிடையே அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்தார். அந்த நேரத்திலேயே தமிழகத்துக்கு புதிய (முழு நேர) கவர்னர் நியமிக்கப்படுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் வித்தியாசாகரே தொடர்ந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு குடியரசு தலைவர் ஆட்சி அமலாக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பொறுப்பு கவர்னராக இருக்கும் வித்தியாசகருக்கு பதிலாக முழு நேர கவர்னரை நியமிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முந்தைய கவர்னர் ரோசய்யா பதவிக்காலம் முடியும் நேரத்திலேயே, கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சங்கரமூர்த்தி தமிழக கவர்னராக நியமிக்கப்படுவார் என்று சொல்லப்பட்டது. அப்போது அவர், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பொறுப்பை ஏற்கமுடியாது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் சங்கரமூர்த்தியை மத்திய அரசு தொடர்புகொண்டதாகவும், தற்போது தமிழக கவர்னராக அவர் சம்மதித்துவிட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன.

அதே நேரம், கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் காவிரி பிரச்சினை தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் அம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை தமிழக கவர்னராக நியமிக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.