நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்புடன் களப்பணியாற்றி வரும் நிலையில், ஒரு காலத்தில் சட்டமன்றத்திலேயே அதிமுக தலைவி ஜெயலலிதாவுக்கு எதிராக கர்ஜித்து, தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்த  கேப்டனின் கட்சி இன்று, அவரது மனைவியின் பிடிவாதம் காரணமாக சவக்குழிக்குள் செல்லும் அபாயத்தில் உள்ளது.

தேர்தலை எதிர்கொள்ள கூட்டணி அமைப்பதில், பிரேமலதாவின் பல்வேறு  நிபந்தனைகளால், மூத்த கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுமே ஆடிப்போய் கிடக்கின்றன. இதன் காரணமாக தேமுதிக தனித்து விடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

மத்திய பாஜக அரசை அடியோடு விரட்டியடிக்கும் நோக்கில், தமிழகத்தில், திமுக காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி உருவாக்கப்பட்டு வருகிறது. இதில், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள்,  முஸ்லிம் லீக், கொங்குநாடு கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக  கட்சிகள் இணைந்துள்ளன. அத்துடன் பல ஜாதிய அமைப்புகளும், திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேவேளையில், அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணியில், பாமக, தமாகா, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இணைந்துள்ளன. மேலும் சில கட்சிகளை இழுக்க முயற்சிகள் செய்து வருகிறது அதிமுக தலைமை.

இந்த நிலையில், கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் தனித்து களமிறங்கி 2 தொகுதிகளை கைப் பற்றிய தேமுதிக, பின்னர் 2011ம் ஆண்டை தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, திமுகவைவிட அதிக இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பிடித்தது. இதன் காரணமாக தேமுதிகவுக்கு என மக்கள் மத்தியில் தனி இமேஜ் ஏற்பட்டது. சுமார் 4 சதவிகிதம் வாக்கு வாங்கிகள் தேமுதிகவுக்கு உள்ளதும் தெரிய வந்தது.

ஆனால், அதன்பின்னர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சில ஆண்டு களாக செயல்பட முடியாத நிலையில், அவரது மனைவி மற்றும் மைத்துனர் கட்சியை தங்கள் கைக்குள்  கொண்டுவந்து ஆட்டம் போட்டு வருகின்றனர். இதன் காரணமாக, தேமுதிக தலை வர்கள் பலர் மாற்றுக்கட்சிக்கு தாவிவிட்ட நிலையில், இருக்கும் ஒருசில மூத்த தலைவர்களும், விஜயகாந்துக்குக்காக  இன்னமும் கட்சியில் நீடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேமுதிகவுடன் நாடாளுமன்ற தேர்லில் கூட்டணி அமைக்க அதிமுக கூட்டணி சார்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், விஜயகாந்த் வீட்டுக்கு நேரில் சென்று பேச்சு வார்த்த நடத்த, பிரேமலதாவின் அதிரடி நிபந்தனையைக் கேட்டு, அலறியடித்து ஓடிவந்தார்.

அதைத் தொடர்ந்து அதிமுக சார்பாக தேமுதிகவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதுவரை சுமார் 5 தடவை ஓபிஎஸ் தேமுதிக தலைமையிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ள நிலை யில், தே.மு.தி.க.,வின்  நிபந்தனைகளால்,  இ.பி.எஸ்., – ஓ.பி.எஸ்., தரப்பு தவித்து வருகிறது.  90 சதவிகித கோரிக்கைகளை அதிமுக கூட்டணி நிறைவேற்ற உறுதி அளிக்கப்பட்ட நிலையிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள சட்டசபை தொகுதிகளில், ஆம்பூர், சோளிங்கர், குடியாத்தம், ஓசூர் ஆகிய நான்கில், ஏதாவது இரண்டு தொகுதிகளை தரவேண்டும்’ என்ற கோரிக்கையை ஏற்ப அதிமுக தயக்கம் காட்டுகிறது. இதன் காரணமாக இழுபறி நீடித்து வருகிறது. தேர்தல் செலவு போக மேலும் பல ‘சி’க்களை கொடுக்க அதிமுக முன்வந்துள்ள நிலையில், அது குறித்து, தேமுதிகவிடம் இருந்து   இதுவரை எந்தவித பாசிட்டிவான சிக்னலும்  கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தேர்தலிலும் களமிறங்கி சில தொகுதிகளை கைப்பற்றி னால், தனது செல்வாக்கை உயர்த்தலாம் என்று தேமுதிக கனவு கண்டு வருகிறது. ஆனால், அதை ஏற்க அதிமுக உறுதியாக மறுத்து விட்டது.

இதற்கிடையில்,  திமுக தலைவர் ஸ்டாலினே நேரில் சென்று விஜயகாந்தை சந்தித்து, கூட்டணி குறித்து பேசியும், பிரேமலதாவின் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாது என்று கைவிரித்து விட்டார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாளை கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க தேமுதிக அவசர கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேமுதிக தன்னிடம் 4 சதவிகிதம், 5 சதவிகிதம் வாங்கு வங்கி இருப்பதாக இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்றைய கள நிலவரம் தெரியாமல் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசிக்கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

விஜயகாந்த் முதன்முதலாக தீவிரமாக  களமிறிங்கிய  2006ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்ட மன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது. 232 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்று (விருத்தாச்சலம் தொகுதி) சட்டமன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்தார்.

அந்த தேர்தலில் தேமுதிகவுக்கு சில பகுதிகளில் குறைந்த பட்சம் 3 சதவிகிதம் முதல் அதிக பட்சம் 10 சதவிகிதம் வரை  வாக்குகள் கிடைத்திருந்தன. இதன் காரணமாக, அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தேமுதிகவை மக்கள் எதிர்பார்த்தனர். அதன் காரணமாக தேமுதிக கூட்டணயில் சேர்க்கவும், திமுக, அதிமுக கட்சிகள் விரும்பின.

இந்த நிலையில்,  2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 29 இடங்களில் வெற்றி பெற்று, திமுகவை பின்னுக்கு தள்ளி, முதன் முதலாக தேமுதிக தலைவர்  விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். ஆனால், சட்டமன்றத்தில் ஜெ.விடம் நடத்திய வாக்குவாதம் காரணமாக, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது.

அதைத்தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன்  கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக மண்ணை கவ்வியது.

பின்னர்  2016ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.  இந்த தேர்தலில் தேமுதிக பெரும் வெற்றி பெறும் என்று இறுமாப்பில், மக்கள் கூட்டணியின்  கூட்டணியின் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.

இந்த கூட்டணி சார்பில் தேமுதிக 104 தொதிகயில் களமிறங்கியது. மற்ற கட்சியினர் 130 தொகுதி களில் போட்டியிட்டனர். இதில், ஒன்றுகூட வெற்றி பெற முடியாமலும், பல தொகுதிகளிலும் டெபாசிட்டையும் இழந்து மீண்டும் மண்ணை கவ்வியது தேமுதிக. இதன் காரணமாக தமிழக மக்களிடையே தேமுதிக மீதான எதிர்பார்ப்பு குறைந்து வருவது வெட்டவெளிச்சமாக தெரிய வந்தது.

இந்த நிலையில், தற்போது நடைபெற உள்ள நாடாளுன்ற தேர்தலில், கடந்த 2011ம் ஆண்டு தேர்தலின்போது கிடைத்த வாக்கு சதவிகிதத்தை கணக்கில் கொண்டு அரசியல் சதுரங்கம் ஆடி வருகிறார் பிரேமலதா விஜயகாந்த்.

ஆனால், அவரது கணக்கு தப்பு என்று கூற, அவரது கட்சி நிர்வாகிகள் முன்வரவில்லை என்பது பெரும் சோகம்.

தற்போதைய சூழலில், மக்கள் மிகவும் எதிர்பார்த்த விஜயகாந்த், உடல்நலம் குன்றி, பேசவோ, நடமாடவோ முடியாத நிலையில், தேமுதிகவின் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்வதற்கு பதிலாக, தாங்கள் கேட்கும் தொகுதிகளும், செலவுக்கு பல கோடிகள் பணமும்  வேண்டும் என்று பிடிவாதமாக பேசி வருவது திமுக, அதிமுக கட்சிகளிள் மட்டுமல்லாது மக்களிடையேயும், தேமுதிக மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொம்மையாக அமர வைக்கப்பட்டு, அவரது மனைவி படம் காண்பித்து, அரசியல் பேரம் பேசி வருவதாக சமூக வலைதளங்களில் இன்றைய இளம் தலை முறையினர் பிரேமலதாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தேமுதிகவின் பலமே இளைஞர்கள் தான் என்பதை பிரமேலதா விஜயகாந்த் மறந்து விட்டார்.

பிரமேலதாவின் பதவி மற்றும் பண ஆசை காரணமாக தேர்தலில்  தேமுதிக தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது.  பிரேமலதா வின் அதீதா  ஆசையின் காரணமாக இன்று  தேமுதிக தனது  எதிர்காலத்தை இழந்து வருகிறது…. இதே நிலை நீடித்தாலும்…. தேமுதிக விரைவில் சவக்குழிக்குள்  சென்றுவிடும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.