சென்னை

விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  விஜயகாந்த் உடல்நிலை குறித்து இணையத்தில் பலவித தகவல்கள் பரவிய நிலையில், அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா, அவர் நலமுடன் இருப்பதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். விஜயகாந்த் உடன் இருக்கும் படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்த் நேற்று நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம்

‘விஜயகாந்த் உடல் நிலை நன்றாக இருக்கிறது. ஓரிரு நாளில் நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் யாரும் விஜயகாந்த் உடன் இருப்பதில்லை. நான் மட்டுமே அவருடன் இருந்து வருகிறேன். அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்துத் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனாலும், சிலர் தொடர்ந்து வதந்தி பரப்பி வருகிறார்கள். தவறாக ஒரு தகவலைப் பரப்பும் முன்பு யாராக இருந்தாலும் எங்கள் தலைமை கழகத்தைத் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும். 

அப்படி கேட்டால் விஜயகாந்த் உடல்நிலை குறித்துச் சொல்லப் போகிறோம். அதைவிட்டுவிட்டு பலரும் வதந்தி பரப்பி வருகிறார்கள். நான் மனசு வருத்தப்பட்டுக் கேட்கிறேன்.. கேப்டன் மீது அப்படி என்ன வன்மம் என்று எனக்குப் புரியவில்லை.. அவர் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் எனப் பல முறை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.. ஆனாலும் சிலர் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். 

நன்றாக  இருக்கும் மனிதரைப் பற்றி இப்படிதான் பரப்புவீர்களா.. ஒரு மனைவியாக என்னையும்.. தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை அது எந்தளவு பாதித்து இருக்கும் என்பதை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தால் இப்படிதான் தகவல்களைப் பரப்புவீர்களா.. தயவு செய்து பொய்யான தகவல்களைப் பரப்பாதீர்கள். 

இதன் காரணமாகவே நான் விஜயகாந்த் உடன் இருக்கும் படங்களையும் வெளியிட வேண்டி இருந்தது. நான் அந்த படத்தைப் போட வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஆனால், பலரும் பொய்யான தகவல்களைப் பரப்பியதாலேயே நான் அதைப் பகிர்ந்தேன். தயவு செய்து இனிமேலாவது கேப்டன் விஜயகாந்த் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம். விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார்”

என்று அறிவித்துள்ளார்.