சென்னை

தேர்தல் குறித்து பாஜகவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தே.மு.தி.க. மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்,சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

பிறகு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம்,

”தேர்தல் அரசியலில் கட்சிகள் கூட்டணி வைப்பது இயற்கை. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தனர். தே.மு.தி.க. சார்பில் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்குச் சென்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதனால், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டும் என்று நாங்கள் எங்கள் உரிமையைக் கேட்டிருக்கிறோம். பேச்சுவார்த்தைக்கு அழைத்தவர்கள் நல்ல செய்தி வரும் என்று கூறியுள்ளனர்.

நாங்கள் பா.ஜனதாவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பா.ஜனதா எங்களுடன் நட்புறவுடன் இருக்கிறார்கள். எங்களின் எடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஒரு வாரக் காலத்துக்குள்ளாகத் தெரிவிக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.”

என்று தெரிவித்துள்ளார்.