திருவனந்தபுரம்

டைபெற உள்ள மக்களவை தேர்தலில் பிரபல நடிகர் சுரேஷ் கோபியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கே முரளிதரன் போட்டியிட உள்ளார்

கேரளாவில் உள்ள திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக காங்கிரசை சேர்ந்த ர் டி.என். பிரதாபன் உள்ளார். இவர் தான் இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர் தனது தொகுதியில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு யாத்திரையை நடத்தி இருப்பதோடு , பாராளுமன்ற தொகுதி முழுவதும் சென்று பிரச்சாரம் செய்து வந்தார்.

சுமார் 150 இடங்களில் அவரது பெயரில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு 3 .5 லட்சத்துக்கு அதிகமான சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்ட நிலையில், திடீரென்று அவர் போட்டியில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகள் பத்மஜா இப்போது பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.

எனவே பத்மஜா தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி அங்கு பா.ஜனதா வெற்றிக்கு வழி வகுப்பார் என்ற சந்தேகம் கட்சி மேலிடத்துக்கு ஏற்பட்டதே வேட்பாளர் மாற்றத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இங்கு பா.ஜனதா சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார்.

இங்கு ஆளும் இடது முன்னணி வேட்பாளராக வலது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுனில் குமார் களத்தில் உள்ளார். இந்நிலையில் பத்மஜா கட்சி மாறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சக்தி வாய்ந்த வேட்பாளரான கே. முரளிதரனை அந்த தொகுதியில் களம் இறக்குகிறது.

முரளிதரன் கருணாகரனின் மகன் என்பதால் இவர் சகோதரியின் சவாலை முரளிதரன் எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மறைந்த கருணாகரனின் அரசியல் சக்தி வாய்ந்த பிராந்தியமாக திருச்சூர் கருதப்படுகிறது. எனவே இந்த தொகுதியைக் கைப்பற்ற பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.

பிரதாபன் பெயரில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களை மாற்றவும் , சுவரொட்டிகளை நீக்கவும் காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்களிடம் உத்தரவிட்டு உள்ளனர்.ஏற்கனவே வடகரா தொகுதியில் போட்டியிடுவதற்கான பணிகளை கே. முரளிதரன் தொடங்கிய நிலையில் காங்கிரசின் இந்த அதிரடி மாற்றம் திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல், திருச்சூர். சுரேஷ் கோபி, கே முரளிதரன்,