னிப் பெயர்ச்சி 2017 : மிதுன ராசிக்கான பலன்கள்

மிதுன ராசிக்காரர்களுக்கு இதுவரை 6 ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை 7 ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.  இது கண்டகச் சனியாக உள்ளதால் எல்லாவற்றிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும்.  குடும்பத்தில் தேவையற்ற விவாதங்கள் ஏற்படலாம்.

நகைகள், மிகவும் விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் மிகவும் கவனம் தேவை.   வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.  வேலை நிமித்தமாக குடும்பத்தை பிரியவும் நேரிடலாம்.  இரவு நேரப் பயணத்தைக் கூடுமான வரை தவிர்க்கவும்.

சனி பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அலர்ஜி, தோல் நோய்கள், செரிமானக் கோளாறுகள், முடி உதிர்தல், மறதி, தலைச்சுற்றல் ஆகியவை வந்து நீங்கும்.  வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகம் ஆகும்.  தாயாரின் உடல் நிலை பாதிப்பு,  தாயாருடன் வீண் சண்டை, கையிருப்புகள் கரைவதால் கடன் சுமை ஆகியவை நேரிடும்.

வர்த்தகர்கள் வியாபார விரிவுக்காக கடன் வாங்க வேண்டாம்.  கூட்டுத் தொழில் ஆகாது.  பழைய பாக்கிகளை வசூல் செய்து புதிய கடன் தருவதை தவிர்க்கவும்.  கடை இடம் மாற்றம், பங்குதாரர்களுடன் மோதல் ஆகியவையும் நிகழலாம்.  அரிசி, பருப்பு, கமிஷன், கெமிக்கல் வர்த்தகர்கள் பயன் பெறுவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சலுகைகள் உடனடியாக கிடைக்காது.  இடமாற்றம், பழைய அதிகாரிகளின் உதவிக்கு வாய்ப்புண்டு.  ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்து இடுவதை முற்றிலும் தவிர்க்கவும்

மாணவர்கள் மற்றும் மாணவிகள் படிப்பில் அலட்சியம் காட்டுவது, விளையாட்டின் போது கவனமின்றி இருப்பது ஆகியவைகள் அறவே கூடாது.

கலைத்துறையினருக்கு வாய்ப்புக்கள் குறைய வாய்ப்புள்ளதால் கிடைக்கும் எந்த ஒரு சிறிய வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வது நன்மை தரும்.

இந்த சனிப்பெயர்ச்சியில் அனுபவ அறிவால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

மூல நட்சத்திரத்தில் 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார்.  இந்த குடும்ப மகிழ்ச்சி, கேட்ட இடத்தில் உதவி, கடன் தீர்த்தல் முன் கோபம் விலகல், குடும்ப வருமானம் அதிகரிப்பு ஆகியவைகளுக்கு வாய்ப்பு உண்டு.  மிருகசீரிடம் 3, 4ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும், புனர்பூசம் 1-3 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் நற்பலன்கள் உண்டாகும்.  திருவாதிரையில் பிறந்தவர்கள் உறவினர் மற்றும் நண்பர்களுடன் கருத்து மோதல் ஏற்படக்கூடும்.

பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரையிலான தேதிகளில் சனி சஞ்சாரம் செய்கிறார்.  இந்தக் காலத்தில் கணவன் – மனைவிக்குள் விவாதங்கள் அதிகம் ஏற்படும்.  திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும்.  மிருகசீரிடம் 3-4 மற்றும் புனர்பூசம் 1-3 பாதங்களில் பிறந்தவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்கவும்.

உத்திராடம் நடத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனி பகவான் சஞ்சரிக்கிறார்.  இந்த கால கட்டத்தில் புதிய முயற்சிகள் வெற்றி அடைவது, இளைய சகோதர்களின் பாசமும் உதவியும் கிடைக்கும்.  சொத்துச் சிக்கல் தீர்ந்து அரசின் உதவி கிடைக்கும்.  குடும்பமும் மகிழ்வுடன் விளங்கும்.  மிருகசீரிடம் 3-4 மற்றும் புனர்பூசம் 1-3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் நடக்கும்.  திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணையின் ஆரோக்யத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

வக்கிரச் சனி பலன்கள்

மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் வக்கிரமாக செல்கிறார்.  இந்த நேரத்தில் செலவுகளை மிகவும் குறைத்துக் கொள்ள வேண்டும்.  சகோதரர்கலிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது.

பூராட நட்சத்திரத்தில் 10.5.19 முதல் 11.8.19 வரை, 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை சனிபகவான் வக்கிர சஞ்சாரத்தில் உள்ளார்.  இந்த நேரத்தில் தாயாரின் உடல் நிலை தேறும்.  சேமிப்பு வளரும்.

உத்திராடம் நட்சத்திர முதல் பாதத்தில் 2.5.20 முதல் 16.7.20 வரை சனிபகவானின் வக்கிர சஞ்சாரம் இருப்பதால் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர வாய்ப்புண்டு.  மகளுக்கு வரன் பார்ப்பதாக இருந்தால் மிகவும் கவனத்துடன் பார்க்கவும்.

பரிகாரம் : சனிக்கிழமையன்று கோவை மாவட்டம் இருளர்பதியில் உள்ள ஸ்ரீ சுயம்பு பெருமாளை துளசி மாலை அணிவித்து  வழிபட்டு  வர வேண்டும்