சிகாகோ உலக மதங்கள் மகாநாட்டில் விவேகானதர் உரையாற்றி இன்று முதல் 125ஆம் ஆண்டு விழா தொடங்கி உள்ளது.

சிகாகோவில் 1893ஆம் வருடம் செப்டம்பர் 11ஆம் தேதி உலக மதங்கள் மகாநாடு நடைபெற்றது.  அதில் இந்தியாவின் சார்பில் விவேகானதர் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  19ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்து மத துறவி விவேகானந்தரின் இந்த உரை மூலம் இந்துமத தத்துவம் உலகெங்கும் உணரப்பட்டது.

தனி மனிதப் புகழ்ச்சி, பிடிவாதம் ஆகியவைகளை ஒழித்தால் தான் எந்த ஒரு மனிதனும், நாடும் முன்னேற்றம் பெறும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் விவேகானந்தர்.  இந்தியா என்பது எந்த கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு சகிப்புத்தன்மை உடையது, யாரையும் வெறுக்காது என்பதை எப்போதும் விவேகானந்தர் சொல்லி வந்தார்.

அந்த மகாநாட்டில் அவருடன் 5000 பிரதிநிதிகள் கலந்துக் கொண்ட போதிலும் விவேகானந்தரின் உரை ஏற்படுத்திய தாக்கம் வேறு யாருடைய உரையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரர்.  1863 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி பிறந்தவர்.  கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் பயின்றவர். இவரது குருநாதர் ராமகிருஷ்ண பரஹம்சர். ஆன்மீக உண்மை தேடி நாடெங்கும் அலைந்த அவருக்கு அந்த ஞானம் தமிழ்நாட்டில் கன்யாகுமரியில் கிடைத்தது.  அவர் மூன்று நாட்கள் தியானம் செய்த பாறையில் தற்போது மண்டபம் கட்டப்பட்டுள்ளது.  அதற்குப் பின் தான் அவர் மகாநாடு சென்று உரையாற்றினார்.  தனது 39ஆம் வயதில் 1902ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி மரணம் அடைந்தார்.   அவர் புகழ் இன்றும் போற்றப்பட்டு வருகிறது.