பாட்னா:

தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் உயிர் தியாகம் செய்த பீகார் வீரரின் உடலை வாங்க அரசு சார்பில் செல்லாததற்கு வருந்துவதாக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியில் சேர்ந்துள்ள தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.


ஜம்மு காஷ்மீரில் கடந்த வெள்ளியன்று தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையின்போது நடந்த மோதலில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பின்டு சிங் உயிர் தியாகம் செய்தார்.

மூவர்ணக் கொடி போர்த்திய அவரது உடல் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணி அளவில் பாட்னா விமான நிலையம் வந்தது.
அப்போது உடலைப் பெற மாநில அரசு தரப்பிலோ, மத்திய அரசு தரப்பிலோ யாரும் வரவில்லை.

ஆனால், அதன்பிறகு 3 மணி நேரம் கழித்து பிரதமர் மோடி பாட்னா பேரணியில் கலந்து கொள்ள வந்தார். அவரை முதல்வர் நிதிஷ்குமார் உட்பட அவரது அமைச்சர்கள்  விமான நிலையத்தில் காத்திருந்து வரவேற்றனர்.

இந்த சம்பவத்தை எதிர்கட்சிகள் கடுமையாக சாடின. குறிப்பாக, பீகார் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவும் விமர்சித்திருந்தார்.

பதவியில் இருக்கவேண்டும் என்பதுதான் அமைச்சர்களுக்கு முக்கியம். உயிர் தியாகம் செய்த வீரரைப் பற்றி நினைக்க அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த என் மகனுக்கு இரங்கல் தெரிவிக்கக் கூட ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை என்று சிஆர்பிஎஃப் வீரர் பிண்டுவின் தந்தை சக்ரதார் சிங் வேதனைப்பட்டிருந்தார்.

உயிர் தியாகம் செய்த அந்த வீரருக்கு சிஆர்பிஎஃப் இன்ஸ்பெக்டர், லோக் ஜன்சக்தி கட்சி எம்பி.சவுத்ரி மெஹ்பூப் அலி கெய்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பீகார் மாநில தலைவர் மதன் மோகன் ஜா ஆகியோர் மட்டுமே அஞ்சலி செலுத்தினர்.

அதேநேரம், பிரதமர் மோடியும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் இணைந்து பேரணி நடத்திக் கொண்டிருந்தனர்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நிதிஷ்குமார் கட்சியில் கடந்த ஆண்டு சேர்ந்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், “வீரரின் உடலை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சார்பில் நேரில் சென்று பெறாதற்கு வருத்தம் தெரிவிப்பதாக” குறிப்பிட்டுள்ளார்.