சென்னை: 2021ம் ஆண்டு திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் இருப்பார் என்று அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

தேர்தல் வியூக நிபுணர், தேர்தல் உத்தி வகுப்பாளர் என்று வர்ணிக்கப்படுபவர் பிரஷாந்த் கிஷோர். 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், பாஜக பெற்ற வெற்றியின் பின்னணியில் இருந்தவர்.

பிரசாரம் எப்படி மேற்கொள்ள வேண்டும், என்ன பேசவேண்டும், எங்கே மேடை அமைக்க வேண்டும், சமூக வலைதள பிரச்சாரங்கள் என வடிவமைத்து அசத்தி வருகிறார். 2015ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில், கிஷோரின் வியூகத்தால், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சரானார்.

அதன் பிறகு, 2018ம் ஆண்டு பிஷாந்த் கிஷோர், அக்கட்சியின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது நீக்கம் பெரும் விமர்சனத்தை எழுப்பியது.

கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக நிதிஷ்குமார் அறிவித்த சிறிது நேரத்திலேயே டுவீட் செய்த பிரஷாந்த் கிஷோர், மிக்க நன்றி. நிதிஷ் குமார் தொடர்ந்து பீகார் முதல்வர் இருக்கையில் நீடித்திருக்க இறைவனை வேண்டுகிறேன், கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று கூறியிருந்தார்.

இந் நிலையில் திமுகவின் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வியூக வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோரும், அவரது ஐபேக் நிறுவனமும் இணைந்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: எங்கள் 2021 தேர்தலில் எங்களுடன் இணைந்து பணியாற்றவும், எங்கள் திட்டங்களை வடிவமைக்கவும் தமிழ்நாட்டின் பல பிரகாசமான மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட இளம் தொழில் வல்லுநர்கள் அடங்கிய ஐபேக் என்ற பதாகையின் கீழ் எங்களுடன் இணைகிறார்கள் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.

அவரின் டுவிட்டர் பதிவை அடுத்து, ஐபேக் பிரஷாந்த் கிஷோரும் டுவிட்டரில் அதை உறுதிப்படுத்தி நன்றி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டரில் கூறி இருப்பதாவது;

நன்றி திரு @mkstalin 2021ம் தேர்தலில் உறுதியான வெற்றியைப் பெற உதவுவதற்கும், உங்களது திறமையான தலைமையின் கீழ் மாநிலத்தை முன்னேற்றம் மற்றும் செழிப்பு பாதையில் கொண்டு செல்வதில் பங்களிப்பதற்கும் திமுகவுடன் இணைந்து பணியாற்றுவதில் உற்சாகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.