போபால்

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாகுர் பேச்சால் ஹிஜாப் சர்ச்சை மேலும் தீவிரமாகி உள்ளது.

இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பினால் கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது.  இதை எதிர்த்து மாணவிகள் சார்பில் வழக்கு தொடர்ந்தனர்.  கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித்துண்டு போன்ற மதரீதியான உடைகள் அணியத் தடை விதித்தது.

நேற்று கர்நாடகாவில் காவல்துறை பாதுகாப்புடன் கல்லூரிகள் திறக்கப்பட்ட போதிலும் ஹிஜாப் தடை காரணமாக மாணவிகள் வகுப்புக்கு வரவில்லை.   நாடு முழுவதும் ஹிஜாப் விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.   இது குறித்து பாஜக பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாகுர் கருத்து தெரிவித்தது சர்ச்சையை தீவிரமாக்கி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் ஒரு கோவில் நிகழ்வில் பிரக்யா பங்கேற்றார்.  அவர், “பொது இடங்களில் ஹிஜாபை அணிய வேண்டாம்.  அவரவர் வீடுகளில் பாதுகாப்பாக உணராதோரே ஹிஜாப் அணிகின்றனர்.  முஸ்லிம் பெண்கள் மதரசாக்களுக்கு ஹிஜாப் அணிந்து செல்வதில் பிரச்சினை இல்லை.   பொது இடங்களில் இந்து சமூகத்தினர் உள்ளனர்.

அவர்கள் யாரும் பெண்களை மோசமாகப் பார்ப்பதில்லை.  அவர்கள் பெண்களைத் தெய்வமாக வணங்குகின்றனர்.  எனவே நீங்கள் உங்களை ஹிஜாப் அணிந்து மறைத்து கொள்ள வேண்டாம்.   எங்களால் பொது இடங்களில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது” என உரையாற்றி உள்ளார்.  சமூக வலை தளங்களில்  அவர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.