சென்னை:
த்தாம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை பங்கேற்க தனி கவனம் செலுத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. மொழிப்பாடத்துடன் துவங்கும் பொதுத் தேர்வுகள் 06.04.2023 முதல் 20.04.2023 வரையிலான நாட்களில் நடைபெற உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கம் 2023 ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாகவும் பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்தல் மற்றும் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக அறிவிப்பை கடந்த மார்ச் 21ம் தேதி வெளியிட்டது. அதன்படி மாணவர்கள் கடந்த 27ம் தேதி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து தேர்வுக்கு தயாராகினர்.

பொதுத் தேர்விற்கு முந்தைய செய்முறை தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் நேற்றுடன் (28.03.2023) முடிவடைந்தன. இதில் சில மாணவர்கள் கலந்து கொள்ளாத நிலையில் வரும் 31.03.2023 வரை கால நீட்டிப்பு வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு செய்முறை தேர்விற்கு வரும் 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் செய்முறை தேர்விற்கு வருகை புரியாத அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்துமாறு அரசு தேர்வுகள் இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.