திருவண்ணாமலை: தமிழகஅரசு மின்தடையே இல்லை என்று கூறி வரும் நிலையில், திருவண்ணாமலையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று மின்வாரியத் துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

கோடைகாலம் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டின் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. ஆனால், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வெட்டே இல்லை என்றும், மின்தடை என சமூக வலைதளங்களில் பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.  இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு மார்ச் 2022 இறுதியில், 378.328மி.யூ / 17,196 MW” என்று புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளார்.

ஆனால்,  திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு மின் பகிர்மான வாரியத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது என்றும் அதனால் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதி களில் விவசாயம் பாதிக்கப்படுகிறது என்றும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மின்சார வாரியத்திற்கு சென்று இன்று ஏப்ரல் 30ஆம் தேதி பகல் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

இதுகுறித்து கூறிய விவசாயிகள், தங்களது பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், தச்சம்பட்டு சுற்றுவட்டார கிராமங்களில் கரும்பு, நெல், வாழை, மணிலா, பப்பாளி ஆகிய பயிர்களை சாகுபடி செய்துள்ளோம். பயிர்களுக்கு உரிய தண்ணீர் விட முடியாததால் பயிர்கள் வாடிக் கொண்டிருக்கின்றன. மின்சார வாரிய அதிகாரிகளிடம் நாங்கள் முறையிட்டபோது நல்லவன் பாளையத்தில் ட்ரான்ஸ்ஃபார்மர் பழுது அடைந்திருப்பதால் மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அதனை சீர்செய்ய போதுமான நிதி இன்னும் ஒதுக்கீடு செய்யவில்லை கூறுகின்றனர். அதனால் போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.

இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், விவசாயிகளை சமாதானப்படுத்தி, விரைவில்,  விவசாயிகளுக்கு மின்சாரம் தங்கு தடையின்றிக் கிடைக்கும் என்று உறுதி அளித்தனர்.