புதுக்கோட்டை:

பொன்னமராவதியில் இரு தரப்பினருக்கு இடையே கலவரம் ஏற்பட  காரணமாக  இருந்த  வாட்ஸ் ஆப் ஆடியோவை வெளியிட்ட சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் குறிப்பிட்ட சாதி பெண்களை இழிவாக பேசி சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வெளியானது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் வெடித்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், கலவரத்தை தூண்டிவிட்டதாக  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 18ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு அன்று மாலை  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் கலவரம் வெடித்தது. அந்த சமயத்தில், ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக சித்தரித்து, தரக்குறைவாக பேசியும்  மற்றொரு தரப்பினர் வெளியிட்ட வாட்ஸ் ஆப்பில் ஒரு ஆடியோ வைரலானது.

இதனால், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவதூறு பரப்பியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, போராட்டங்கள் நடைபெற்றது. போலீசார்  வாகனங்கள் மீது கற்களை வீசி சிலர் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இச்சம்பவம் தொடர்பாக சுமார் 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான ஆடியோவை வெளியிட்டதாக, பட்டுக்கோட்டையை சேர்ந்த வசந்த், செல்வகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்கள்  திருமயம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் முகமது அலி முன்பு ஆஜர்படுத்தி  15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். தற்போது, அவர்கள்  திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில், ஆடியோவில் பேசிய  செல்வகுமார் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தது தெரிய லவந்தது. அங்கிருந்தபடியே பேசி இந்த அவதூறு ஆடியோவை வெளியிட்டுள்ளார், அதை  வசந்த் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் வைரலக்கி இருப்பதுதெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், சிங்கப்பூரில் இருந்த செல்வக்குமாரை அவரது குடும்பத்தினர் மூலமாக ரகசியமாக பேசி இந்தியாவுக்கு வரவழைத்து, விமான நிலையத்திலேயே காவல்துறையினர் கைது செய்தனர். அவருடன் ,பட்டுக்கோட்டையில் வைத்து வசந்தையும், கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.