சென்னை:

சிகலாவை மிக தீவிரமாக ஆதரித்து பேசிவந்த வந்த அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் தற்போது திடீரென முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எம்ஜிஆர் காலத்தில் தமிழக அமைச்சராக இருந்தவர் பொன்னையன். அதைத்தொடர்ந்து  ஜெயலலிதா அதிமுக செய்தித் தொடர்பாளராக பொன்னையனை நியமித்திருந்தார்.

ஜெயலிலதா மறைவுக்குப் பிறகு  சசிகலாவை தீவிரமாக ஆதரித்து குரல் கொடுத்துவந்தார்  பொன்னையன். “ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா” என ஸ்ரீராம் சிட்பண்ட் நாமினி பேப்பரை காட்டியும் சர்ச்சையில் சிக்கியவர் பொன்னையன்.

இந்த நிலையில் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதன் திடீரென முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தந்தார். இதனால் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்து இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவால் மதுசூதனன் நீக்கப்பட்டார்.

புதிய அவைத் தலைவராக கே.ஏ. செங்கோட்டையனை நியமித்திருந்தார் சசிகலா. அதிமுக அவைத் தலைவர் பதவி தமக்கு கிடைக்கும் என காத்திருந்த பொன்னையனுக்கு இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தற்போது அமைதியாகிவி்ட்டார் பொன்னையன். அவர் விரைவில் ஓ.பி.எஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவிப்பார் என்று தகவல் உலவுகிறது.