சென்னை: தமிழக காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, சிறைத்துறை சீர்திருத்த துறைகளில் பணியாற்றும் பணியாளர்களில் 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

காவல்துறையினர், தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி,  இந்த ஆண்டு காவல் துறையில்( ஆண் /பெண்) காவலர் நிலை-1,  தலைமை காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலையில் மூவாயிரம் பணியாளர்களுக்கு தமிழக “முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்” வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறை மற்றும் சீர்திருத்தத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர் நிலை-1, தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்  வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும்,

சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் (ஆண்/பெண்) முதல் நிலை வார்டர்கள் மற்றும் இரண்டாம் நிலை வார்டர் நிலைகளில் 60 நபர்களுக்கும்,

தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள் வழங்கப்படும். மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400/-, 2021 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும்.

மேலும், காவல் வானொலி பிரிவு, நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு  தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.

இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.

இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் தமிழக முதல்வரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.