புதுவை முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமார் (வயது 65). புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள நிரவியில்  வசித்து வந்தார்.

இன்று மதியம் அவர் நிரவியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரது காரை வழிமறித்தது.

அவர்கள் சிவக்குமாரை சரமாரியாக ஆயுதங்களால் கொடூரமாக வெட்டினார்கள்.  தில் அவரது கழுத்து தொங்கிய நிலையில் சிவக்குமார் கீழே விழுந்தார். அவர் இறந்ததை உறுதி செய்துகொண்ட பிறகு கும்பல் தப்பித்து ஓடியது.

 

பிறகு அருகில் இருந்தவர்கள் சிவக்குமாரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சிவக்குமாருக்கு இருவித பின்னணி உண்டு என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

ஒன்று அரசியல் பின்னணி.

ஆரம்பத்தில் தி.மு.க.வில் இருந்தார். அப்போது அமைச்சராகவும், பின்னர் சபாநாயகராகவும் பதவி வகித்தார். கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வில் டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால், கோபத்தில் கட்சியைவிட்டு வெளியேறி, சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  பிறகு, அப்போது ஆட்சியில் இருந்த  என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.
பிறகு கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு  அ.தி.மு.க.வில் சேர்ந்தார். நிரவி தொகுதியில் போட்டியிட்டு  தோல்வி அடைந்தார்.

முன்னாள் அமைச்சர், முன்னாள் சபாநாயகர் என்ற இந்த அரசியல் பின்னணியோடு, வேறொரு பின்னணியும் இவருக்கு உண்டு என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அதுதான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

அவர்கள் சொல்வது இதுதான்:

“காரைக்காலில் உள்ள சாராயக்கும்பல்களுடன் சிவக்குமாருக்கு நெருக்கமான தொடர்பு உண்டு. இந்த   சாராய கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது நடக்கும் மோதலில் கொலைகள் விழுவது சர்வசாதாரணம். அப்படியோர் கொலைதான் சிவக்குமாருடையதும்.

கடந்த செப்டம்பர் மாதம், சிவக்குமாரே காவல்துறையில் ஒரு புகார் அளித்தார். அதில், “ஒரு பெண்மணி எனக்கு போன் செய்து, என் கணவரின் சொத்துக்களை அபகரித்து வைத்திருக்கிறீர்கள். ஆகவே  மாதாமாதம் பணம் தரவவேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவேன்” என்று மிரட்டியதாக அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார்.

திருபட்டினம் காவல் நிலையத்தில் இந்த புகார் பதியப்பட்டது.  சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம் ஜெஸ்மாண்ட் மற்றும் போலீசார் இது குறித்து விசாரணை செய்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் கொலை செய்யப்பட்டசாராய வியாபாரி ராமுவின் இரண்டாவது மனைவி எழிலரசி என்பவர்தான் கொலை மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவந்தது.

ஆகவே சிவக்குமார் கொலையின் பின்னணியில் அந்தப் பெண் இருந்திருக்கலாம்” என்கிறார்கள்” என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

மேலும், “கள்ளச்சாராயம் உட்பட சட்டவிரோத தொழில்களுடன் அரசியல்வாதிகள் சிலருக்கு இருக்கும் தொடர்புக்கு சிவக்குமார் ஒரு உதாரணம்” என்கிறார்கள்.