சென்னை: பாலிடெக்னிக் கல்லூரி பருவ தேர்வுகள் வருகிற 25-ந்தேதி தொடங்குவதாக அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது. விரிவான தேர்வுகால அட்டவணை வருகிற 11-ந்தேதி வெளியிடப்படும் என கூறியுள்ளது.

தமிழ்நாட்டில்,  தமிழ்நாடு அரசு தொழில் நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ் 505 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 3 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு இரு பருவ தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு, பாலிடெக்னிக் படிப்புகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பருவ தேர்வு குறித்த அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நடப்பாண்டுக்கான முதல் பருவதேர்வு வருகிற 25-ம் தேதி தொடங்கி பல்வேறு பாட வாரியாக டிசம்பர் மாதம் 17-ந்தேதி வரை நடத்தப்பட இருப்பதாகவும்,  செய்முறைத் தேர்வுகள் டிசம்பர் மாதம் 13-ம் தேதி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், இதுதொடர்பான   விரிவான தேர்வுகால அட்டவணை வருகிற 11-ந்தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி டிசம்பர் மாதம் 19-ந்தேதி தொடங்கி நடைபெறும். தேர்வுகள் முடிந்தபின் மாணவர்களுக்கு டிசம்பர் 18-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை விடுமுறை என்பதுடன், மீண்டும் ஜனவரி  2-ந்தேதி கல்லூரிகள்  திறக்கப்படும் என்றும்  தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]