கும்பமேளாவிலும் அரசியல்… அலகாபாத் அமர்க்களம்..

ட்சி தொடங்கப்போவதாக கடந்த ஆண்டு   அறிவித்த  ரஜினிகாந்த் ‘’தனது அரசியல்  ஆன்மீக அரசியலாக இருக்கும்’’என்றார்.

அவர் சொன்னதை செய்வாரோ இல்லையோ-சொல்லாமலே உத்தரபிரதேசத்தில்  அரசியல் கட்சிகள் ஆன்மீக அரசியலை கையில் எடுத்து விட்டன.

அங்குள்ள அலகாபாத் நகரில் தற்போது கும்பமேளா என்ற கோலாகல இந்து திருவிழா  நடந்து வருகிறது.

கங்கை,யமுனை,சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் புனித ஸ்தலத்தில் நீராடினால் கோடி புண்ணியம் கிடக்கும் என்று நம்பப்படுகிறது.உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்  அலகாபாத்தில் குவிந்து வருகிறார்கள்.

இந்த ஆன்மீக தலம்- இன்றைக்கு அரசியல் களமாகி விட்டது.

காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படுள்ள பிரியங்கா காந்தி வரும் 4 ஆம் தேதி லக்னோவில் செய்தியாளர்களுடன் உரையாடி விட்டு கங்கையில்  நீராடும் உத்தேசத்தில் உள்ளார்.

இதனால் அவர் இந்து வாக்குகளை அள்ளி விடுவாரோ என்ற பதற்றத்தில் சொல்லாமல் , கொள்ளாமல் அலகாபாத்துக்கு திடீர்  விசிட் அடித்த  சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கங்கையில் குளித்து –ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

நாட்டில் 13 பிரதான இந்து பிரிவுகளை  உள்ளடக்கிய அமைப்பு-அகில பாரத அக்கரா பரிஷத். இந்த அமைப்பின் தலைவரையும் சந்தித்து ,ஆசி வாங்கி இருக்கிறார் அகிலேஷ்.

தேர்தல் நேரத்தில் மட்டும் இந்து சாமிகளை அகிலேஷ் தேடி ஓடும் போது , 24 மணி நேர சாமியாரான உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் சும்மா இருப்பாரா?

கும்பமேளா கூட்டத்துக்கு மத்தியில் தனது அமைச்சரவை கூட்டத்தையே  இன்று கூட்டியுள்ளார், யோகி.

கங்கை நதிக்கரையில் கூட்டத்தை நடத்தி முடித்த கையோடு-சக அமைச்சர்களுடன்  புனித நதிகள் சங்கமத்தில்  நீராடவும்  திட்டம்.உபி. சரித்திரத்தில் அமைச்சரவை கூட்டம், கும்பமேளாவில் நடப்பது இதுவே முதல் முறையாகும்.

—–பாப்பாங்குளம் பாரதி